உலகம்

“ஒரு மணி நேரத்தில் ஒப்பந்த மீறல்” – ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

உலகளவில் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து வழக்கம் போல் தடையின்றித் தொடர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள பரஸ்பரத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றில் பேசிய அதிபர் ட்ரம்ப், அணுஆயுதத் தடை உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று ஈரான் வரலாற்றுச் சிறப்புமிக்க நிறைவான ஒப்பந்தம் ஒன்றுக்கு உடன்பட்டதாகக் கூறினார்.

ஆனால், பேச்சுவார்த்தை அறையை விட்டு வெளியேறிய அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், ஈரான் ஒரு வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

ட்ம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மத்தியப் படைப் பிரிவு தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில், இந்த நீர்வழிப்பாதை சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறந்துவிடப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. ஈரானின் தன்னிச்சையான பிரகடனங்களுக்கு மத்தியிலும், கடல்சார் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சர்வதேச விதிமுறைகளின்படி பயணிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்கவும் அமெரிக்கப் படைகள் அப்பகுதியில் முழு வீச்சில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சென்ட்காம்  தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் உரிமைகோரலை நிராகரித்துள்ள அமெரிக்க ராணுவம், “ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை, கப்பல் போக்குவரத்து சாதாரணமாக நடந்து வருகிறது” என்று கூறியுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் ஈரானின் நிலைப்பாடு முற்றிலும் வேறாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்கப்படாத பாதையை பயன்படுத்திய கப்பல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நீர்வழிப்பாதை மீண்டும் மூடப்படுவதாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவுடன் ஏற்கனவே எட்டப்பட்டிருந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button