பலதும் பத்தும்

விண்வெளித் துறையில் சீனாவின் புதிய வரலாற்றுச் சாதனை

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆர்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து, விண்வெளித் தொழில்நுட்பத்தில் சீனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் 2015ஆம் ஆண்டு முதன்முறையாக வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவும் இந்த தொழில்நுட்ப சாதனையைப் பதிவு செய்துள்ளது.

தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச்-10பி’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

விண்வெளித் துறையில் சீனாவின் புதிய வரலாற்றுச் சாதனை | China S New Historic Achievement In Space Industry

திட்டமிட்டபடி தனது செயற்கைக்கோளை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர், ராக்கெட்டின் முதல் அடுக்கு (பூஸ்டர்) கட்டுப்பாட்டுடன் பூமியை நோக்கி திரும்பியது.

கடலில் அமைக்கப்பட்டிருந்த மிதவை மேடையில் பிரத்யேக வலை அமைப்பின் மூலம் அந்த பூஸ்டர் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டுகள் பொதுவாக தரைப்பகுதி அல்லது ஆளில்லா கப்பல்களில் செங்குத்தாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் ‘லாங் மார்ச்-10பி’ ராக்கெட் வலை அமைப்பில் பிடிபடும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.

63 மீட்டர் உயரமும், 5 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ராக்கெட், திரவ எரிபொருளில் இயங்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வணிக ராக்கெட்டாகும்.

890 டன் உந்துவிசை மற்றும் 760 டன் எடையைக் கொண்ட இந்த ராக்கெட், குறைந்த புவிச் சுற்றுப்பாதைக்கு 16 டன் வரை பயன்சுமையை எடுத்துச் செல்லும் திறன் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீன நிறுவனங்கள் மேற்கொண்ட செங்குத்து தரையிறக்க சோதனைகள் தோல்வியடைந்த நிலையில், இந்த வெற்றி சீனாவின் விண்வெளிப் பயணச் செலவைக் குறைப்பதோடு, எதிர்கால நிலவுப் பயணத் திட்டங்களை வேகப்படுத்தும் என விண்வெளித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button