இலங்கை

குறிவைக்கப்படுகிறாரா முன்னாள் அமைச்சர் டிரான்; முன்பிணை கோரி மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸைக் கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முன்பிணை மனுவொன்றை அவர் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான காசோலைப் பரிவர்த்தனை தொடர்பாக, தன்னைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், அதனைத் தடுக்கும் வகையிலான இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

டிரான் அலஸுக்கு சொந்தமான சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ‘கேசர லங்கா’ பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான காசோலைப் பரிவர்த்தனை தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பொலிஸ மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் கேசர லங்கா லிமிடெட் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான டிரான் அலஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த ரிட் மனு, நீதியரசர்கள் மகேந்திரா மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் பரிசீலிக்கப்பட்டது.

இந்த நெருக்கடி தொடர்பாக மனுதாரர் நிறுவனத்தின் பல ஊழியர்களிடம் பொலிசார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரைக் கைது செய்வது சட்டவிரோதமானது என்பதால், மனுதாரர் நிறுவனம் ஒரு மேன்முறையீட்டு மனுவையும், அதைத் தடுக்கும் ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்குமாறு கோரியுள்ளது.

அதனையடுத்து குறித்த மனு மீதான மேலதிக விசாரணைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் 30ஆம் தேதி விசாரணைக்கு நிர்ணயித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button