இலங்கை

சிறைச்சாலைத் தாக்குதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய காவலரைத் தண்டிக்காதீர்!; எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எந்தவித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு நேற்று (08) இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அமைச்சரிடம், அங்கு திரண்டிருந்த அதிகாரிகள் குழுவினர் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற அன்று, மேற்படி அதிகாரி துரிதமாகச் செயற்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யாதிருந்திருந்தால், அங்கு பாரிய உயிர்ச் சேதங்களும் பெரும் பேரழிவும் ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தே அவர் தற்காப்புக்காகவும், கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கவும் துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளனர்.

இதன்போது, சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, முறையான நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகளின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, கொடூர சம்பவம் தொடர்பில், முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் முழுமையான நீதி பெற்றுத்தரப்படும் என்றும் அதிகாரிகளிடம் நீதியமைச்சர் கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயன்றமையாலேயே இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அமைச்சின் செயலாளரின் மேற்பார்வையில், சிறைச்சாலையில் நடந்த மோதல் தொடர்பில் உயர்மட்டக் குழு விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button