பலதும் பத்தும்

மருத்துவப் பரிசோதனையின் பின் நலமுடன் கதிர்காமம் சென்றடைந்த”சுப்பிரமணியம்”

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையில் இணைந்து, இலங்கை மக்களின் பெரும் அன்பைப் பெற்ற “சுப்பிரமணியம்” என்ற நாய் தற்போது கதிர்காம ஆலயத்தை நலமுடன் சென்றடைந்துள்ளது.

எனினும், இது பாதையாத்திரை குழுவினருக்கு தெரியாமல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் முதல் வாரம் முல்லைத்தீவு பகுதியில் பாதயாத்திரை அடியார்களுடன் இணைந்து கொண்ட இந்த நாய், சுமார் 36 நாட்களுக்கும் மேலாக அசைவ உணவுகளைத் தவிர்த்து பக்திப் பூர்வமாகப் பயணித்தது.

பக்தர்களால் இதற்கு பட்டுத் துணி அணிவித்து, குங்குமப் பொட்டிட்டு ‘சுப்பிரமணியம்’ என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.

பயணத்தின் இடையே, கடந்த வெள்ளிக்கிழமை( 03.) கல்முனை பகுதியில் வைத்து கால்நடை வைத்தியர் மூலம் இந்த நாய்க்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தடையூசி (Vaccination) போடப்பட்டதுடன் முறையான மருத்துவ அத்தாட்சிப் பத்திரமும் (Medical Certificate) பெறப்பட்டது.

உகந்தை காட்டுவழிப் பாதை நாளை வெள்ளிக்கிழமை (10) திறக்கப்படவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக இன்று வியாழக்கிழமை (09) வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்போடு வாகனத்தின் மூலம் பிள்ளையாரடியில் இந்த நாயைக் கொண்டுவந்து இறக்கி, பாதயாத்திரைக் குழுவினருடன் கதிர்காமம் நோக்கி நடைபயணமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், திட்டமிட்டதற்கு மாறாக, கடந்த திங்கட்கிழமை(06) இரவு பாணமையிலிருந்து வனவிலங்கு அதிகாரிகளுக்கும், பாதையாத்திரை குழு ஏற்பாட்டாளர்களுக்கு தெரியாமல்,அந்த நாயின் உரிமையாளரெனக் குறி வந்த ஒருவரால் சுப்பிரமணியம் நாய் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக யாத்திரிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பாணமையிலிருந்து இரண்டு உதவியாளர்களுடன் வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றப்பட்ட நாய், கடந்த செவ்வாய்க்கிழமை (07) கதிர்காமத்தை வந்தடைந்துள்ளது. இதனுடன் பாதையாத்திரை சென்ற ஏனைய அடியார்கள் அனைவரும் இன்னும் பாணமையிலேயே தங்கியுள்ளனர்.

சுப்பிரமணியம் நாய், தற்போது கதிர்காமம் கொடியேற்றத்திற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே கதிர்காமத்தைச் சென்றடைந்து கொடியேற்றத்திற்காகக் காத்திருக்கிறது.

நிருவாக நடைமுறைகளைத் தாண்டி, விலங்கு ஒன்றின் இந்த விசித்திரமான மற்றும் பக்திப் பூர்வமான பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமை இணையவாசிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button