இலங்கை

கண்ணீர் விட்டு அழுத நீதி அமைச்சர்; கலங்கி நின்ற அதிகாரிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.

இதன்போது கடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.

உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின்னர், அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீர் மல்க நீதி அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் மத்தியில் ஒரு அசாதாரணமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எந்தவித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்க வேண்டாம் என அவர்கள் அமைச்சரிடம் கோரினர்.

அந்த அதிகாரி மட்டும் அன்றைய தினம் துரிதமாகச் செயற்பட்டு, துப்பாக்கிப் பிரயோகம் செய்யாதிருந்திருந்தால், அங்கு ஒரு மிகப்பெரிய பேரழிவும் பெரும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தே அவர் அவ்வாறு செயற்பட வேண்டியிருந்தது என்பதை அவர்கள் அமைச்சருக்கு விளக்கினர்.

அதிகாரிகளின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த நீதி அமைச்சர், இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான நியாயம் பெற்றுத்தரப்படும் என அங்கு கூடியிருந்தவர்களுக்கு உறுதியளித்தார்.

குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலைமை தணிவடைந்த பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் அதற்கு அடுத்த நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (06) காலை கைதிகளுக்கு உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அச்சமயத்தில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தடுத்து நிறுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீதும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவ்வேளையில் பல்லன்சேன சிறைச்சாலைக்கு புதிய நியமனம் பெற்று வந்திருந்த பிரதான ஜெயிலரும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கு வருகை தந்திருந்ததுடன், அவர் மீதும் கைதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளால் அவர் காப்பாற்றப்பட்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சில அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களைப் போட்டு கைதிகள் தாக்கியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இந்த மோதலில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button