பலதும் பத்தும்

வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து டெலிகிராமுக்கும் எச்சரிக்கை!

வாட்ஸ்அப் நிறுவனத்தைத் தொடர்ந்து, பிரபல மெசேஜிங் செயலிகளான டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களைப் பகிராமல் தனியுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் இந்த யூசர்நேம் அம்சம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி டெலிகிராமில் இந்த அம்சம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. சிக்னல் செயலியில் இது பயனர்களின் விருப்பத் தேர்வாக உள்ளது குறிப்பிடத்தக்கது.பயனர்கள் தங்களின் போன் எண்களை மறைத்துவிட்டு யூசர்நேம்களைப் பயன்படுத்தும்போது ஆன்லைன் ஆள்மாறாட்டம், பணமோசடி மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற இணையக் குற்றங்கள் பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்த அடையாளம் தெரியாதத் தன்மை காரணமாக சைபர் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து எளிதாகத் தப்பித்துவிடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அரசின் இந்த ஒழுங்குமுறை மாற்றங்களுக்கு இணங்கி, தங்கள் நிறுவனத்தின் ‘அரட்டை’ செயலியில் உள்ள யூசர்நேம் அடிப்படையிலான கணக்கு அம்சத்தை முடக்குவதாக ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.முன்னதாக நேற்று வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த மூன்று நாட்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள மெட்டா நிறுவனம் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கப் பல்வேறு பாதுகாப்பு அடுக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

அரசு அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் பெயர்களில் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதைத் தடுக்க அந்த யூசர்நேம்கள் முடக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், ஒரே நேரத்தில் பல புதிய நபர்களைத் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மெட்டா நிறுவனத்தின் இந்த விளக்கத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button