அனைத்தும் பலமாக இருப்பதால் எதிர்க்கட்சிகள் இணைந்தால் புதிய அரசை அமைக்கலாம்; மகிந்த கூறுகிறார்

எதிர்க்கட்சிகள் தற்போது பலமான நிலையில் இருப்பதாகவும், இதனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறுகையில்,
இப்போது கவலைக்குரிய நிலைமையே இருக்கின்றது. இதனை மக்களிடம் கேட்டால் புரியும். இப்போது நாங்கள் மக்களுடன் இருக்கின்றோம். அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை. .
இதேவேளை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், சில தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் ஏனைய உறுப்பினர்களும் தமது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தனது அரசியல் சகாக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இந்த வழக்குகள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று குற்றம் சாட்டினார். இவை தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
![]()