புலிகளின் ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் தாக்கி அழித்த தளபதியை அரசு பழிவாங்குகிறது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பாரிய ஆயுதக் கப்பல்கள் கரைக்கு வருவதற்கு முன்பதாகவே, நடுக்கடலில் வைத்து தாக்கி அழித்த நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய, அதி உயர் கௌரவத்திற்குரியவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இப்படிப் பெருமைக்குரிய ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியமை, இந்த அரசாங்கத்தின் குறுகிய அரசியல் பழிவாங்கலையே காட்டுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தான் செய்துகொண்ட உடன்படிக்கைகளின்படி, இராணுவ வீரர்களை பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலடைத்து, உலகளாவிய புலிகள் வலையமைப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் ஹீரோக்களை நீதிமன்றங்களுக்கும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுக்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் இழுத்தடித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 04 ஆம் மாடியில் தடுத்து வைத்து அவமதிப்பதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அரசாங்கம் வழங்கும் முன்மாதிரி என்ன என்ற கேள்வி எழுகின்றது.
இந்த அரசாங்கத்துக்குச் சாதகமாக பேசும் சிலருக்கு இந்த வீரப் பதக்கங்கள் வெறும் தொங்கும் தகரங்களாகத் தோன்றலாம், அப்படியென்றால் அவர்கள் வாங்கிய சட்டப் பட்டப் படிப்பும் வெறும் காகிதக் கிழிசல் தான். அந்த ஒவ்வொரு பதக்கத்துக்குப் பின்னாலும் ஒரு வீர வரலாறு இருக்கிறது.
இன்று ஒரு தேசத்தின் ஹீரோக்களாக எப்போதும் மதிக்கப்பட வேண்டிய மனிதர்களை இவ்வாறு இழுத்தடித்து, அவமதித்து, பழிவாங்குவதைப் பார்த்துக் கொண்டு உணர்ச்சியற்ற ஒரு சமூகமாக இன்று நாம் மாறியுள்ளோம்.
இதன் மூலம் எந்தவொரு இனம் அல்லது மக்கள் கூட்டம் இனி இந்நாட்டுக்காக ஆபத்தை எதிர்கொள்ள முன்வருவார்கள்? அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டுத் தொழிற்சாலையை உருவாக்கி லேபல் ஒட்டுவதாலேயே ஒருவரைத் திருடன் என்று ஏற்றுக்கொள்ள முடியாது, அதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் தங்களுக்கு சவாலாக அமையக்கூடிய நபர்களை இலக்கு வைத்து பழிவாங்குவதையே இந்த அரசாங்கம் தற்போது செய்து வருகின்றது. இதன் மூலம் மக்களின் பேச்சு சுதந்திரத்தை முடக்கவே பார்க்கிறார்கள்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளான ஷானி அபேசேகர போன்ற, தேசிய மக்கள் சக்தியின் மேடைகளில் இருந்தவர்களைப் பயன்படுத்தியே காவல்துறை மூலமாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கம் தங்களுக்கு சாதகமாகச் செயல்படும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் காலத்தை நீடித்துக் கொடுத்து, நீதிமன்ற கட்டமைப்பைத் தங்களுக்குத் தேவையானவாறு பயன்படுத்த முனைகிறது.
எவர் மீதாவது பொய்க் குற்றச்சாட்டுகளை உருவாக்கி, அவர்களைக் கைது செய்து, மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதே இந்த அரசாங்கத்தின் இறுதி நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
![]()