யாழில் இராணுவ முகாம் அருகில் வாள்வெட்டு ; நால்வர் படுகாயம்; வீடு புகுந்த கும்பல் துணிகரத் தாக்குதல்

யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி தெரியவருவதாவது:-
நாவாந்துறைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கும், கிளிநொச்சி – நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தனிப்பட்ட தகராறு நிலவி வந்துள்ளது.
இந்தப் பகைமையின் காரணமாக, நேற்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து ‘பட்டா’ ரக வாகனமொன்றில் ஆயுதங்களுடன் வந்த நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த வன்முறைக் கும்பலே, நாவாந்துறையில் உள்ள அந்த வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தாக்குதலை நடத்திய பின்னர் அந்தக் கும்பல் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றுள்ளது.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள நாச்சிக்குடா கும்பலைச் சேர்ந்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை களை யாழ்ப்பாணம் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
![]()