நீர்கொழும்பு சிறையில் குழு மோதலில் இரு கைதிகள் பலி, 27 பேர் படுகாயம்; இரு கைதிகள் தப்பியோட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 25 கைதிகள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரு கைதிகள் குழுக்களுடையே ஏற்பட்ட தகராறு, பின்னர் பாரிய மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இரு குழுக்களும் கடுமையாக மோதிக்கொண்டுள்ள நிலையில் அங்கு பெரும் கலவர நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வேளையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த மோதலின் போது படுகாயமடைந்த கைதிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.அத்துடன் இரு கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த மேலும் 25 கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலை வாகனங்களில் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
போதைப் பொருள் வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இரு குழுக்களுக்கிடையே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் மோதலுக்கான பின்னணி குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![]()