இலங்கை

நிரந்தர நியமனம் வழங்குமாறு வெலிஓயா சிங்கள மொழி தொண்டர் ஆசிரியர்கள் கோரிக்கை!

​முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேச சிங்கள மொழிப் பாடசாலைகளில் நீண்ட காலமாகத் தொண்டர் அடிப்படையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தமக்கான நிரந்தர நியமனங்கள் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

​அத்துடன் தமது வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள இப்பிரச்சினைக்குத் துறைசார் அதிகாரிகள் உரிய தீர்வை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​யாழ்ப்பாண ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.

​​இதன்போது அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக வெலிஓயா பிரதேசத்தில் உள்ள சிங்கள மொழிப் பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளைத் தொண்டர் அடிப்படையில் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனாலும் எமது பாடசாலைகளுக்கு நிரந்தர நியமனம் பெற்று வரும் ஆசிரியர்கள் பெரும்பாலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இதன் காரணமாக, அவர்கள் குறுகிய காலத்திற்குள் இடமாற்றம் பெற்றுத் தமது சொந்த மாவட்டங்களுக்குச் சென்றுவிடுகின்றனர்.

இந்தத் தொடர்ச்சியான ஆசிரியர் இடமாற்றச் சுழற்சியால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

​வெளிமாவட்ட ஆசிரியர்கள் இடமாறிச் சென்றாலும், நாம் இந்த மாவட்டத்தையே நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டு, எந்தவித நிரந்தர நியமனமும் இன்றித் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் கற்பித்து வருகின்றோம்.

​அதனடிப்படையில் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டும், நீண்டகாலமாக வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையை உணர்ந்தும், தமக்கு விரைவாக நிரந்தர நியமனங்களை வழங்கத் துறைசார் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button