லசந்த- தாஜுதீன் – பிரகீத் கொலைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்! ஜனாதிபதியிடம் கேள்வி

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொடூரப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியங்களையும், உளவுத்துறைத் தகவல்களையும் திட்டமிட்ட முறையில் மூடி மறைத்த முக்கிய புள்ளிகள் சிலர் தற்போதைய அரசில் உயர் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அன்று ராஜபக்சர்களின் நிழல் ஆட்சியில் அங்கம் வகித்து, இந்தகொலை வழக்குகளை முடக்கிய பழைய நண்பர்களைத் தங்களுக்கு அருகில் ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு, இந்த அரசால் எவ்வாறு உண்மையான கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வசீம் தாஜுதீனின் படுகொலை
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ‘நச்சுப் போதைப்பொருள்களை ஒழித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுத்தல்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போது லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜுதீன் மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய அரசியல் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராகப் புதிய அரசு சட்ட நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிர்க்கட்சியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஏனெனில், அன்று எமது நல்லாட்சி அரசின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்குகளே இன்று வரை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
ஜனாதிபதியிடம் கேள்வி
ஆனால், இந்த வழக்குகளைத் தொடர்வதற்கு எதிர்க்கட்சியினரே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்று ஜனாதிபதி சபையில் குற்றம் சாட்டுகின்றார். அவ்வாறு இந்தக் கொலை விசாரணைகளைத் தடுப்பவர்கள் யார் என்பதை ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படையாகக் கூற வேண்டும்.

ஏன் அதனைச் செய்யாமல் மறைக்கின்றீர்கள்? முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் உங்களின் பழைய அரசியல் நண்பர்களா? அதனால்தான் அவர்கள் யார் என்று கூறாமல் ஜனாதிபதி மௌனம் காக்கின்றாரா? தாஜுதீன் கொலையில் அன்று ராஜபக்சவினருடன் மிக நெருக்கமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு, வழக்கை திசைதிருப்பியவர்கள் இன்று உங்களின் அரசின் ஒவ்வொரு முக்கிய துறைகளிலும் ஆலோசகர்களாக வீற்றிருக்கின்றார்கள்.
ஜனாதிபதிக்கு இந்த வழக்குகளில் நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தாலும், இத்தகைய ஆலோசகர்களை வைத்துக்கொண்டு அதனைச் செய்ய முடியாது.
இந்த அரசியல் படுகொலைகள் மீண்டும் மூடி மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
தடுத்தது யார்
இதேவேளை, நாட்டின் உயர் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு நாங்கள் எதிர்க்கட்சியாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
சபாநாயகரும் ஜனாதிபதியும் இணைந்து இதற்கான தார்மீக நியமனங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த நீதிப் பரிபாலனக் கட்டமைப்பிலும், அதன் சுயாதீனத் தன்மையிலும் பாரிய முடக்க நிலைமைகள் ஏற்படலாம்.

அத்துடன், அரசு முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இணையாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்களைப் புனர்வாழ்வளிக்கும் திட்டங்களும் பலப்படுத்தப்பட வேண்டும். கொழும்பு, தலங்கம பகுதியில் 35 வயதுக்கு குறைந்த ஆண்களுக்காக இயங்கி வந்த பிரதான புனர்வாழ்வு மையம் தற்போது மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஏழைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கண்டி போன்ற தூரப் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கொழும்பு மாவட்ட இளைஞர்களின் நலன் கருதி தலங்கம புனர்வாழ்வு மையப் பிரிவை உடனடியாக மீளத் திறப்பதற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
![]()