இலங்கை

இந்திய அரசுடனான உறவை நாம் பலப்படுத்த வேண்டும்; தமிழ்க் கட்சிகளிடம் முன்னாள் எம்.பி. சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்து 

இந்திய அரசுடன் தமிழ்க் கட்சிகள் இராஜதந்திர உறவை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதுவே எமக்கு இருக்கும் ஒரே சந்தர்ப்பம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

போர் முடிந்து 17 வருடங்கள் ஆகியும் எமது மக்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை கூட எங்களால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.புதிய அரசியலமைப்பு, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் என்ற விடயம் உட்பட பல விடயங்களில் இந்த அரசாங்கம் வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மாறியுள்ள புதிய உலக அரசியல் ஒழுங்கானது மோசமான நிலைக்கு சென்றுள்ளதை அவதானிக்க முடியும்.

இஸ்ரேல், ஈரான், உக்ரேன் மற்றும் ரஸ்யப் போர்களை பார்க்கும் போது ஐக்கிய நாடுகள் சபையை தொடர்ந்து நம்பிக் கொண்டிருப்பது தமிழ் மக்களை மீண்டும் பின்நோக்கி தள்ளுகின்ற நிலையினை உருவாக்கும் என்பது புலனாகின்றது.எனவே அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒருபுள்ளியில் ஒன்றிணைய வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

அந்தவகையில், இந்திய அரசுடன் தமிழ்க் கட்சிகள் ராஜதந்திர உறவை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அது ஒன்றே எமக்கு இருக்க கூடிய சந்தர்ப்பம்.

இந்த அரசு தீர்வினை தருவார்கள் என வெறுமனே பாராளுமன்றுக்குள் இருந்து கொண்டு எதனையும் செய்ய முடியாது.தமிழர்களின் பிரச்சனைகளை இராஜதந்திர ரீதியாக புதுடில்லி அரசாங்கத்துடன் பேசுவதனூடாகவே குறைந்தபட்சமான தீர்வையாவது காணமுடியும்.

அதுவே இந்த போரில் உயிரிழந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாங்கள் செய்கின்ற அர்ப்பணிப்பாக இருக்கும்.எனவே தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இதுவே இந்த தியாகிகள் தினத்தில் நாங்கள் விடுக்கின்ற பிரதான கோரிக்கை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button