உலகம்

ஹார்முஸ் நீரிணைக்கு தனி ஆணையத்தை உருவாக்கிய ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகம் மற்றும் கப்பல் போக்குவரத்து தொடர்பாக புதிய அறிவிப்பொன்றை ஈரான் வெளியிட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஹார்முஸ் நீரிணையை திறந்துவைத்தல், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துதல் உள்ளிட்ட 14 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, ஹார்முஸ் நீரிணையின் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக “பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம்” என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் அந்த அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களிடம் கட்டணம் அறவிடும் திட்டத்திற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என சில சர்வதேச நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை ஈரான் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

அமெரிக்காவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்தும் வழக்கம்போல் நடைபெற்று வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சக பேச்சாளர் பாகாயி தெரிவித்துள்ளார்.

எனவே, உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை தற்போது திறந்த நிலையிலேயே உள்ளதாகவும், கப்பல் போக்குவரத்தில் எந்தத் தடையும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button