முச்சந்தி

மானிப்பாய் காணி விவகாரம்: அப்பாவி மக்களை பலிகடாவாக்க வேண்டாம்! – தவறான செய்தியால் பாதிக்கப்பட்ட தரப்பின் வேண்டுகோள்

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி தொடர்பாக சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான செய்திகளால் தாம் மற்றும் தமது குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர்,

இன்றைய காலச் சூழலில் ஊடகங்களின் விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றாலும், உண்மைக்குப் புறம்பான செய்திகளின் தாக்கம் அப்பாவி மக்களையும் அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதிப்பதாகத் தெரிவித்தார்.

பண்டத்தரிப்பு பகுதியில் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அந்தக் காணி பிரதேச சபையினால் பொறுப்பேற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் காணியில் இருந்த இரும்பு கேற் அண்மையில் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததுடன், பிரதேச சபையின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப்பட்டது.

காணியின் பாதுகாப்பிற்காக 24 மணிநேர கடமையில் சிற்றூழியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ தினத்தில் பொலிஸார் விசாரணைக்காக அங்கு செல்லவிருந்த காரணத்தால் அவர் தொடர்ந்து அங்கு இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்காக அவரது மனைவி உணவு கொண்டு சென்றிருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், செய்தி சேகரிப்பதற்காக வந்ததாகக் கூறப்படும் ஒருவரின் தகவலின் அடிப்படையில், குறித்த பெண்ணை மையப்படுத்தி சில சமூக வலைத்தளங்களும் இணைய ஊடகங்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக, காணிக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆணும் பெண்ணும் இருந்ததாக வெளியிடப்பட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்த அவர்கள், இவ்வாறான செய்தியிடல்கள் தமது குடும்பங்களுக்குள் முரண்பாடுகளையும் மனவேதனைகளையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறினர்.

மேலும், பொறுப்பற்ற செய்தி வெளியீடுகள் தமது குடும்பத்தின் நிம்மதியையும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்ணின் மனநலனையும் சமூக அந்தஸ்தையும் பாதித்துள்ளதாக தெரிவித்த அவர்கள், ஊடகங்கள் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இத்தகைய தவறான செய்தியிடல்களால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இனிமேல் வேறு எவருக்கும் ஏற்படக் கூடாது என்பதே தமது வேண்டுகோள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button