முச்சந்தி

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த போதிலும் விலை குறைந்த எரிபொருளை நாம் இன்னும் வாங்கவில்லை

தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்த போதிலும், அந்த விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டில் நிலவும் எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை விளக்குவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் தெளிவுபடுத்தினார்.

தற்போது நாட்டில் நுகரப்பட்டு வருவது இதற்கு முன்னர் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் என்பதால், அந்த விலைகளின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு தீரும் வரை உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு சாத்தியமில்லை என அவர் கூறினார்.

இருப்பினும், அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் நுகர்வு நிறைவடைந்த பின்னர், விலை குறித்து ஒரு முடிவை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறுதியாக ஓடர் செய்த பெற்றோல் மற்றும் டீசல் விலைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் விலைக்குறைப்பு ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்க்கிறீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எமக்கு எதிர்காலத்தில் வரவிருப்பது கடந்த மாதங்களில் கொள்வனவு செய்தவையாகும்.

குறைந்த விலையிலான எரிபொருளை எதிர்காலத்திலேயே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு சில கால தாமதம் ஏற்படும்.

ஆனால் விலை குறையும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதற்கமைய, தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகையை நீக்காமல் இதே விலையில் பேணுவதா அல்லது விலையைக் குறைப்பதா என்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button