பூதாகரமாகும் செம்மணிப் புதைகுழி விவகாரம் 400 ஐ நெருங்கும் எலும்புக் கூடுகள் நேற்றும் 14 வரை கண்டுபிடிப்பு; சிறுவன்,குழந்தையின் எலும்புக் கூடுகள் அகழ்வு

செம்மணி மனித புதைகுழியில் ஒரு சிறுவன் மற்றும் ஒரு குழந்தையின் என்புக் கூடுகள் உள்ளிட்ட ஐந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன்,நேற்று புதன்கிழமை புதிதாக பதின்நான்கு என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 27 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 380 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 362 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மனித என்பு கூட்டு தொகுதியொன்றின் இடுப்பு பகுதியில் இரும்பு வடிவிலான சான்றுப் பொருள் ஒன்று எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சிறுவர் மற்றும் பெண்கள் அணியும் பிளாஸ்டிக் என நம்பப்படும் காப்பு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அது தொடர்பாக கூற முடியும். அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும்.
நீதி அமைச்சர் வருகை தருவதற்கான விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கி இருக்கின்றது. அத்தோடு காணாமல்போனோர் அலுவலக ஆணையாளர்களும் வருகை தரவிருக்கின்றனர் – என்றார்.
![]()