பலதும் பத்தும்

அவுஸ்திரேலியாவில் 4 வாரங்களில் 3வது நபரை கடித்துக் கொன்ற சுறா!

அவுஸ்திரேலியாவில் கடந்த நான்கு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது கொடிய சுறா தாக்குதலில், ஈட்டி மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தின் ஆல்பனி துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள மைக்கேல்மாஸ் தீவில், தனது குடும்பத்தினருடன் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஈட்டி மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரை ஒரு சுறா திடீரென தாக்கியதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக படகு மூலம் ஆல்பனி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க தயாராக காத்திருந்தனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு சுமார் 4.5 மீட்டர் (15 அடி) நீளமுள்ள வெள்ளை சுறா காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த சில தசாப்தங்களாக அவுஸ்திரேலியாவில் ஆண்டுக்கு சராசரியாக மூன்று சுறா இறப்புகள் மட்டுமே பதிவாகி வந்த நிலையில், தற்போது ஒரே மாதத்திற்குள் மூன்று பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முந்தைய சுறா தாக்குதல் கடந்த மே 24 அன்று ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள ‘கிரேட் பேரியர் ரீஃப்’ பகுதியில் நிகழ்ந்தது. அங்கு ஈட்டி மூலம் மீன்பிடித்த 39 வயதான மைக்கேல் ஜென்ஸ் என்பவர் சுறா கடித்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.அந்த பகுதியில் சுறாக்கள் நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது மே 16ம் திகதி, ஆல்பனிக்கு வடமேற்கே உள்ள ராட்னெஸ்ட் தீவுக்கு அருகில் 4 மீட்டர் (13 அடி) நீளமுள்ள வெள்ளை சுறா ஒன்று தாக்கியதில், 38 வயதான ஸ்டீவ் மட்டாபோனி என்ற மீனவர் உயிரிழந்தார்.

இவை தவிர, இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மாதம்) சிட்னி துறைமுகத்தில் சுறா கடித்ததில் 12 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து நிகழும் இந்த சுறா தாக்குதல்களால் அவுஸ்திரேலிய கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button