பலதும் பத்தும்

ரயில் பாதையில் 3 இளைஞர்கள் மர்ம மரணம் குறித்து 56 ஆண்டுகள் கழித்து மீள விசாரிக்குமாறு கோரிக்கை

1970 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேன் மாநிலத்தில் ரயில் பாதையில் மூன்று கனடிய இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 56 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குமாறு உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1970 ஜூலை 10 அன்று, கனடாவின் நோவா ஸ்கோடியா பகுதியைச் சேர்ந்த கென்னி நோவாக், டேவிட் பரோஸ் மற்றும் டெரி பர்ட் ஆகிய மூன்று இளைஞர்களின் சடலங்கள் மேன் மாநிலத்தில் உள்ள ஸ்மிர்னா மில்ஸ் பகுதியில் உள்ள ரயில் பாதையில் மீட்கப்பட்டன.

இவர்கள் ‘கேப் பிரெட்டன் மூவர்’ என அழைக்கப்பட்டனர். அன்றைய தினம் காலை 7 மணியளவில், தண்டவாளத்தில் ‘ஸ்லீப்பிங் பேக்’ பைகளுக்குள் ஏதோ இருப்பதை உணர்ந்த ரயில் ஓட்டுநர், பிரேக் பிடித்தபோதிலும் ரயில் அவர்கள் மீது மோதியது.

அவர்கள் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறி, இது ஒரு விபத்து என்றும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் பொலிஸார் வழக்கை முடித்து வைத்தனர்.

எனினும், உயிரிழந்த கென்னியின் சகோதரரான ரிச்சர்ட் நோவாக், இம்மூவரும் ரயிலில் மோதுவதற்கு முன்னரே கொல்லப்பட்டு, பின்னர் திட்டமிட்டு தண்டவாளத்தில் போடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறார்.

“அந்த வயதில் உள்ள மூன்று சிறுவர்கள் தண்டவாளத்தில் படுத்துத் தூங்குவதற்கு சாத்தியமே இல்லை. ரயில் நெருங்கியபோதும் அந்த பைகளுக்குள் எந்த அசைவும் இருக்கவில்லை. அவர்கள் நிச்சயம் கொலை செய்யப்பட்டு அங்கே கொண்டுவந்து போடப்பட்டிருக்க வேண்டும்” என ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் பின்னணியில் பல விடைதெரியாத கேள்விகள் உள்ளதால், மேன் மாநில அரசு இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இதுவரை 3,100 க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

தனது சகோதரனின் மரணச் சான்றிதழ் கூட இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறும் ரிச்சர்ட், மேன் மாநில அரசு இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், வழக்கு மறுவிசாரணை செய்யப்பட்டு உண்மை வெளிவர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

எனினும், இக்கடந்த கால வழக்கு மற்றும் மறுவிசாரணைக் கோரிக்கை குறித்து மேன் மாநில சட்டமா அதிபர் அலுவலகமோ அல்லது உள்ளூர் பொலிஸாரோ ஊடகங்களுக்கு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *