முச்சந்தி

பசுபிக் தீவுகளில் சீன ஆதிக்கம்: அவுஸ்திரேலிய பிடி தளர்கிறதா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(2022 ஆம் ஆண்டு சாலமன் தீவுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம், அவுஸ்திரேலியா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. இது பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதை வெளிப்படுத்தியது. பசுபிக் தீவு நாடுகளின் பார்வையில் பாதுகாப்பு என்பது இராணுவ அச்சுறுத்தல் மட்டுமல்ல. காலநிலை மாற்றமே மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்)

பசுபிக் தீவுகள் உலக வரைபடத்தில் சிறிய நாடுகளாகத் தோன்றினாலும், அவற்றின் கடல்சார் பரப்பு, இயற்கை வளங்கள் மற்றும் மூலோபாய அமைவிடம் காரணமாக உலக வல்லரசுகளின் போட்டி அதிகரித்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் புவிசார் அரசியலில் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் முக்கிய இடத்தை பசுபிக் நாடுகள் பெற்றுள்ளன. குறிப்பாக சீனா கடந்த இருபது ஆண்டுகளில் பசுபிக் தீவுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளமை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

சீனாவின் அணுகுமுறை

பசுபிக் தீவு நாடுகளுடன் சீனா தனது உறவுகளை பொருளாதார உதவிகள், கட்டுமானத் திட்டங்கள், கடன்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் வலுப்படுத்தி வருகிறது. பெருஞ்சாலைகள், துறைமுகங்கள், அரச கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளை அமைப்பதற்காக பல பில்லியன் டொலர் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் ஆசிய சாலைத் (Belt and Road Initiative) திட்டத்தில் பல பசுபிக் நாடுகள் இணைந்துள்ளன. இதன் மூலம் சீன நிதியுதவி அதிகரித்ததுடன், அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் சீனாவின் பங்களிப்பும், ஆதிக்க தாக்கமும் விரிவடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு சீனா மற்றும் சொலமன் தீவுகள் (Solomon Islands) இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த ஒப்பந்தம் சீன பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறை உதவிகளை அந்நாட்டில் வழங்கும் வாய்ப்பை உருவாக்கியது.

இது வெறும் பொருளாதார உறவாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இராணுவத் தளங்களை அமைக்கும் வாய்ப்புகளுக்கான அடித்தளமாகவும் பார்க்கப்பட்டது. இதனால் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா தங்களது பாதுகாப்பு நலன்கள் பாதிக்கப்படலாம் என்ற கவலையை வெளிப்படுத்தின.

சீனாவின் வளர்ந்து வரும் பாதிப்பு

கடந்த சில ஆண்டுகளாக சீனா பசுபிக் பிராந்தியத்தில் தனது முதலீடுகளையும் அரசியல் உறவுகளையும் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. துறைமுகங்கள், சாலைகள், அரசாங்கக் கட்டிடங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளில் பில்லியன் டொலர் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு சாலமன் தீவுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம், அவுஸ்திரேலியா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. இது பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதை வெளிப்படுத்தியது.

பசுபிக் தீவு நாடுகளின் பார்வையில் பாதுகாப்பு என்பது இராணுவ அச்சுறுத்தல் மட்டுமல்ல. காலநிலை மாற்றமே மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். கடல் மட்ட உயர்வு காரணமாக பல தீவு நாடுகள் தங்களது எதிர்கால இருப்பு குறித்தே கவலைப்படுகின்றன. பல ஆண்டுகளாக நிலக்கரி ஏற்றுமதியைத் தொடர்ந்த அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் குறித்து பசுபிக் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டனர். இதனால், நமது வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் நாட்டே எவ்வாறு எமது முக்கிய கூட்டாளியாக இருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்தது.

பசுபிக்கில் அவுஸ்திரேலிய வகிபாகம்

சீனாவின் ஆதிக்கம் காரணமாக பசுபிக் தீவு நாடுகளில் அவுஸ்திரேலிய வகிபாகம் குறைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு காலத்தில் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடுகளின் முதன்மை பாதுகாவலராகவும், பொருளாதார ஆதரவாளராகவும், அரசியல் செல்வாக்கு மிக்க சக்தியாகவும் அவுஸ்திரேலியா கருதப்பட்டது. ஆனால் கடந்த ஒரு தசாப்தத்தில் உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும், குறிப்பாக சீனாவின் எழுச்சியும், பசுபிக் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவின் பாரம்பரிய ஆதிக்கம் சவாலுக்கு உள்ளாகியுள்ளதா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

பப்புவா நியூ கினி, ஃபிஜி, சாலமன் தீவுகள், வனுவாட்டு, டோங்கா, சமோவா போன்ற நாடுகளுடன் அவுஸ்திரேலியா நீண்டகால உறவுகளைப் பேணிவந்துள்ளது. அபிவிருத்தி உதவி, கல்வி உதவித்தொகைகள், சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் அவுஸ்திரேலியா தனது செல்வாக்கை நிலைநிறுத்தியது.


பசுபிக் தீவு நாடுகளின் பல அரசியல் தலைவர்களும் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஆழமான உறவுகள் உருவாகின.

அவுஸ்திரேலியாவின் புதிய அணுகுமுறை:

இந்தச் சூழ்நிலையை உணர்ந்த அவுஸ்திரேலிய அரசுகள் அண்மைக் காலங்களில் பசுபிக் நாடுகளுடனான உறவுகளை மீளக் கட்டியெழுப்ப முயற்சித்து வருகின்றன. அதிக அபிவிருத்தி உதவி, பாதுகாப்பு ஒப்பந்தங்கள், காலநிலை மாற்றத்திற்கான நிதியுதவி மற்றும் தொழிலாளர் குடியேற்றத் திட்டங்கள் ஆகியவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, “Pacific Step-up” மற்றும் பின்னர் “Pacific Engagement” போன்ற திட்டங்கள் மூலம் அவுஸ்திரேலியா தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வகிபாகம் முற்றிலும் குறைந்து வருகிறது என்று கூற முடியாது. மாறாக, அது தற்போது போட்டியிடப்படும் செல்வாக்காக மாறியுள்ளது. முன்பு அவுஸ்திரேலியாவிற்கு மாற்று சக்தி எதுவும் இல்லாத நிலையில், இன்று சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் பசுபிக் பிராந்தியத்தில் தங்களது இருப்பை வலுப்படுத்துகின்றன. இதனால் பசுபிக் நாடுகள் பல்வேறு சக்திகளுடன் உறவுகளை வளர்த்து, தங்களுக்கான நன்மைகளைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

பசுபிக் தீவு நாடுகளில் அவுஸ்திரேலியாவின் செல்வாக்கு முழுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது என்று கூறுவது மிகைப்படுத்தலாகும். ஆனால் அதன் தனிப்பட்ட ஆதிக்கம் சவாலுக்குள்ளாகியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சீனாவின் எழுச்சி, காலநிலை மாற்ற அரசியல் மற்றும் பசுபிக் நாடுகளின் சுயாதீன வெளிநாட்டு கொள்கைகள் ஆகியவை புதிய அரசியல் சமநிலையை உருவாக்கியுள்ளன.

எனவே, அவுஸ்திரேலிய வகிபாகம் குறைகிறதா? என்ற கேள்விக்கான பதில் — குறைந்து வருவதல்ல; மாறாக அது புதிய போட்டி மற்றும் மாற்றங்களின் சூழலில் மறுவரையறை செய்யப்படுகிறது என்பதே ஆகும்.

ஏன் பசுபிக் தீவுகள் முக்கியம்?

பசுபிக் பெருங்கடல் உலக வர்த்தகப் போக்குவரத்தின் முக்கிய பாதைகளில் ஒன்றாகும். மேலும் கடல்சார் மீன்பிடி வளங்கள், கனிம வளங்கள் மற்றும் எதிர்கால ஆழ்கடல் சுரங்க வாய்ப்புகள் இந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை உயர்த்துகின்றன.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளில் ஒவ்வொரு சிறிய தீவு நாடும் ஒரு வாக்குரிமையைக் கொண்டுள்ளது. எனவே, இந்நாடுகளின் ஆதரவைப் பெறுவது சீனாவிற்கு சர்வதேச அரசியலில் கூடுதல் செல்வாக்கை வழங்குகிறது.

சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தங்களது ஈடுபாட்டை அதிகரித்துள்ளன. புதிய தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார உதவிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம், கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்கள் வழியாக பசுபிக் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக அவுஸ்திரேலியா, பசுபிக் பகுதியை தனது பாரம்பரிய செல்வாக்குப் பகுதியாகக் கருதுவதால், சீனாவின் முன்னேற்றத்தை கவலையுடன் கவனித்து வருகிறது.

பசுபிக் நாடுகளின் நிலை:

பசுபிக் நாடுகள் தங்களை வல்லரசுப் போட்டியின் களமாக அல்லாமல், சுயாதீன நாடுகளாகக் காண விரும்புகின்றன. பல நாடுகள் சீனாவுடனும் மேற்கு நாடுகளுடனும் ஒரே நேரத்தில் உறவுகளைப் பேணுகின்றன. தங்களுக்கு அதிக நன்மை தரக்கூடிய முதலீடுகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக பலதரப்பு வெளிநாட்டு கொள்கையைப் பின்பற்றுகின்றன.

 

Screenshot

அவர்களின் பார்வையில், காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவையே மிகப்பெரிய சவால்கள்; வல்லரசுகளின் போட்டி அல்ல. பசுபிக் தீவுகளில் சீனாவின் செல்வாக்கு இன்று உலக அரசியலின் முக்கிய விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது. பொருளாதார உதவிகள் மற்றும் கட்டமைப்பு முதலீடுகள் மூலம் தொடங்கிய இந்த முன்னேற்றம், தற்போது பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் பரிமாணங்களையும் உள்ளடக்கியுள்ளது.

எதிர்காலத்தில் பசுபிக் பிராந்தியம் சீனா மற்றும் மேற்கு நாடுகளுக்கிடையிலான மூலோபாயப் போட்டியின் முக்கிய அரங்காகத் தொடரும். ஆனால் அந்தப் போட்டியின் மையத்தில் இருக்கும் தீவு நாடுகள் தங்களது தேசிய நலன்களையும் சுயாட்சியையும் பாதுகாத்துக்கொண்டு உலக சக்திகளுடன் சமநிலையான உறவுகளை உருவாக்குவதுதான் அவர்களின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button