இலங்கை

விளக்கமறியலிலுள்ள பாடகர் சார்பில் உடனடியாக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் பாடகர் ஒருவர் சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த பாடகரை சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன் மற்றும் பெனிஸ்லஸ் துஷான் சகிதம் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இதன்போது குறித்த பாடகரின் தாயாரும் உடனிருந்தார்.

சட்டத்தரணி சுமந்திரன் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த இளைஞனான பாடகர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளையிலே சிரேஷ்ட சட்டத்தரணி சயந்தன் அவருக்கு ஆதரவாக முன்னிலையானார்.

இந்த விடயம் சம்பந்தமாக மிக நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன .பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதன் காரணத்தினால் விளக்கமறியல் உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

வழக்கு பிரதியிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட முடியாத விடயங்கள் என்று வாதாடி இருக்கிறார். ஆனால் நீதிவான் முதல் நிலையிலேயே விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்ற காரணத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

தற்போது தாயாருடைய அறிவுறுத்தலின்படி நாங்கள் விளக்கமறியலில் உள்ள பாடகரான சங்கீர்த்தனை சந்தித்து உரையாடி இருக்கிறோம். அவர் சார்பிலே உடனடியாக அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு அவர் எங்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறார். அறிவுறுத்தல்களை பெற்றிருக்கிறோம். நாளைய தினமே(இன்றையதினம்) அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவரது அறிவித்ததின் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து வெகு விரைவில் அவரை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போகின்றோம்.

நீதிமன்றத்திலே இந்த பாடல் சம்பந்தமான முழு விபரமும் கூறப்பட்டிருக்கிறது. இது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே கொண்டுவரக்கூடிய குற்றம் அல்ல. பயங்கரவாத தடைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழே இனங்களுக்கு இடையிலே குரோதத்தை ஏற்படுத்துகிற, ஏற்படுத்த சாத்தியமான நடவடிக்கைகளாக தான் இது சொல்லப்படுகிறது. அப்படியாக இது எந்த விதத்திலும் இனங்களுக்குள் குரோதத்தை ஏற்படுத்த முடியாது. அப்படி ஏற்படுத்தப்படுவதாக வேண்டுமென்றே படம் காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். ஆகையினால் சட்டத்தின் பார்வையிலே இது அப்படியான ஒரு குற்றம் அல்ல என்பதை நாங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சொல்வோம்.

ஏற்கனவே நீதிவான் நீதிமன்றத்திலே சொல்லப்பட்ட விடயங்கள் விசாரணை முடியும் வரைக்கும் அது குறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் உச்ச நீதிமன்றத்திலே இது அடிப்படை உரிமை மீறல் என்கிற விடயத்தை சுட்டிக்காட்டி உடனடி நிவாரணம் பெறுவதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். அதற்கான முழு அதிகாரமும் விளக்கமறியலிலே இருக்கிற சங்கீர்த்தனாலும் அவரது தாயாராலும் எமக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button