இலங்கை

முதியோர் இல்லத்தில் பாரிய தீ 12 பேர் உடல் கருகி உயிரிழப்பு;  மூவரைக் காணவில்லை;6 பேர் பலத்த காயம்;ஹொரணையில் சம்பவம் 

ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இல்லத்தில் தங்கியிருந்தவர்களில் மேலும் மூன்று பேரை கண்டுபிடிக்க முடியாத நிலை நீடிப்பதுடன், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை இந்த தீ விபத்தின் போது அங்கு 72 பேர் இருந்துள்ளதுடன், அவர்களில் 54 பேர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

‘அன்பின் இல்லம்’ என்ற பெயரில் இயங்கிய குறித்த முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் திடீரென தீயேற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்து வந்த அலரல் சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த பிரதேசவாசிகள் அந்த கட்டிடத்திற்குள் இருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் தீ முதியோர் இல்லத்தின் முழுக் கட்டிடத்திற்கும் பரவிய நிலையில், உள்ளே பலர் வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். பின்னர் தீயணைப்பு பிரிவினர் அங்கு விரைந்து இரவு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எவ்வாறாயினும் உள்ளே சிக்கியிருந்த 12 பேர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர். இதேவேளை அங்கு கடும் தீக்காயங்களுக்கு உள்ளான மேலும் 6 பேர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை, ஹொரண நீதவான் லக்மிணி விதானகமகேவினால் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தீயில் சிக்கி கருகியிருந்த சடலங்கள் நீதவான் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டன.

தீ விபத்திலிருந்து தப்பிய முதியோர் இல்லத்தில் இருந்த ஏனையவர்கள் புதன்கிழமை இரவு படகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்துடன், பின்னர் நேற்று காலையில், பாதுகாப்பு தரப்பினரால் அவர்கள் முதியோர் இல்லத்தின் இன்னுமொரு கிளையான கல்பாத பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தீ விபத்து சம்பவத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அந்த முதியோர் இல்லத்தை நடத்தியவரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி அவரைக் கைது செய்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த முதியோர் இல்லத்தின் உரிமையாளரும், விசாரணை நடவடிக்கைகளுக்காக நேற்று சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இல்லத்தின் பணிப்பாளரை நேற்று வியாழக்கிழமை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இல்லத்தின் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டதா அல்லது அலட்சியப்போக்கு இருந்ததா என்ற கோணத்தில் இந்த விசாரணை மற்றும் கைது நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button