தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்யும் ‘அக்கினிக்குஞ்சு’ …. த.கோபால கிருஸ்ணன் வாழ்த்துச் செய்தி

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்யும்
‘அக்கினிக்குஞ்சு’ வாழ்க! வளர்க!
செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் வாழ்த்துகிறார்.
எதிர்வரும் யூன் மாதம் 06 ஆம் திகதி தனது பதினாறாவது அகவையைக் கொண்டாடவுள்ள ‘அக்கினிகுஞ்சு’ இணையத்தளத்தையும் அதன் நிறுவன ஆசிரியர் யாழ்.எஸ்.பாஸ்கர் அவர்களையும் வாழ்த்துவதில் உளம் களிபேருவகை கொள்கிறது.
தமிழர்கள் பொருளாதார – அரசியல் – பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தாய்நிலத்திலிருந்து வெளியேறிப் புலம்பெயர் நாடுகளில் குடியேறத் தொடங்கிய நாளிலிருந்து அவ்வாறு குடியேறிய நாடுகளில் தமது மொழி – கலை இலக்கிய – பண்பாட்டு – சமூக இருப்பின் அடையாளத்தினைப் பேணும் செயற்பாடுகளும் கருக்கொள்ளத் தொடங்கின.
அத்தகைய செயற்பாடுகளுள் அச்சு ஊடகங்களும் மின்னூடகங்களும் ஆற்றிய-ஆற்றி வருகின்ற பங்களிப்புகள் பதிவுக்குரியன மட்டுமல்ல பாராட்டுக்குரியனவுமாகும்.
அந்தவகையில் அவுஸ்திரேலிய மண்ணில் 1991 இல் ‘அக்கினிக்குஞ்சு’ அச்சிதழாக ஜனனம் நிகழ்ந்து பின் 2011 இல் இணையத்தளமாகப் பரிணாமம் பெற்ற அதன் தோற்றமும் – வளர்ச்சியும் – பணிகளும் பாரதியின் ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ எனும் பாடல் வரிகளுக்குச் செயல்வடிவம் கொடுத்ததாகவே எண்ணத் தோன்றுகிறது.
இலங்கை மட்டக்களப்பிலிருந்து 2017 இல் நான் அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோதே யாழ்.பாஸ்கர் அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. எனது அன்புகெழுமிய இலக்கிய நண்பரான செந்தமிழ்ச் செல்வன் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா (சட்டத்தரணி) அவர்களே என்னை யாழ்.பாஸ்கர் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்தார். அந்த மகிழ்ச்சியான தருணம் என் நினைவில் எழுகிறது. அன்றிலிருந்து நான் ‘அக்கினிக்குஞ்சு’வின் வாசகனானேன். யாழ். பாஸ்கரின் நண்பனுமானேன்.
ஆற்றல்மிக்க ஆக்க இலக்கியப் படைப்பாளிகளைக் கொண்டும் – துறைசார் நிபுணர்களிடமிருந்தும் மொழி – கலை – இலக்கியம், பண்பாடு, சமூக, பொருளாதார, அரசியல் எனப் பலவிதமான படைப்புக்களைத் தருவித்து இணையத்தளத்தில் பொருத்தமான படங்களுடன் அவற்றைப் பதிவிட்டு ஒரு தேர்ந்த இதழியல் சிற்பியாகத் தொழிற்படுபவர் நண்பர்; யாழ். பாஸ்கர் அவர்கள்.
அவரது இனிமையான சுபாவமும், ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பணிகளும் அவர்பால் என்னை ஈர்ப்புக்கொள்ளவைத்தன.
எனது அரசியல் பத்தித்தொடர்களும் கலை இலக்கியப் பத்தித்தொடர்களும் ‘அக்கினிக்குஞ்சு’வில் களம்கண்டு வருகின்றன. மாற்றுச் சிந்தனைகளுக்கும் கருத்துக்களுக்கும் துணிந்து களம் கொடுக்கும் அவரது நடுநிலைமையும் அந்நடு நிலைமையைப்பேணும் அவரது ஓர்மமும் அவரிடம் நான்கண்ட தனித்துவங்களாகும்.
‘கனகர்கிராமம்’ எனும் எனது அரசியல் – சமூக – வரலாற்று நாவல் ‘அக்கினிக்குஞ்சு’வில் அறுபத்தியிரண்டு அத்தியாயங்கள் தொடராகப் பிரசுரமாகி இப்போது (13.12.2025) நூலாக வெளிவந்தும் உள்ளது. அந்தவகையில் எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மட்டுமல்ல எனது நன்றிகளும் அவருக்கு உரித்தாகுக.
மாபெரும் ‘இசை அருவி’ இசை நிகழ்ச்சியுடனும் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கலுடனும் நிகழவுள்ள ‘அக்கினிக்குஞ்சு’ இணையத்தளத்தின் 16ஆவது ஆண்டுவிழா அனைத்துச் சிறப்புக்களும் உற உளமார வாழ்த்துகிறேன்.
![]()