யாழில் உணவகமொன்றிற்குள் பூனை வளர்த்த நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றினுள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று, உணவகத்திற்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, உணவகத்தில் இருந்து கழிவுநீரை வெளியில் விட்டு துர்நாற்றம் ஏற்படுத்தியமை, கடைக்குள் பூனை வளர்த்தமை, அழுகிய முட்டை இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்தமை மற்றும் திறந்த வெளியில் சமைத்தமை போன்ற சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக உணவாக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உணவக உரிமையாளர் மன்றில் முன்னிலையாகி தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதனை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று, 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், இனம் காணப்பட்ட சுகாதர சீர்கேடுகளை நிவர்த்தி, செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு அதிகாரிகளுக்கு மன்று பணித்துள்ளது.
![]()