பலதும் பத்தும்

உலக அளவில் மனநலப் பாதிப்புகள் அதிகரிப்பு: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்.!

உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள 75-க்கும் மேற்பட்ட முக்கிய அம்சங்களில், உலகளவில் அச்சுறுத்தலாக மாறிவரும் மனநலப் பாதிப்புகள் குறித்த விவாதம் முதன்மை பெற்றுள்ளது.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 

தற்போதைய நிலவரப்படி, உலகளவில் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது தோராயமாக எட்டில் ஒருவர் ஏதேனும் ஒரு வகையான மனநலப் பாதிப்புடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக அளவில் மனநலப் பாதிப்புகள் அதிகரிப்பு: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்.! | Global Increase Mental Health Disorders Statistics

 

மனநலம் சார்ந்த கோளாறுகள் மனிதர்களின் உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன. மருத்துவ வல்லுநர்கள் இதனைப் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர்.

தொடர்ச்சியான சோகம் மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் மனச்சோர்வு மற்றும் பைபோலார் கோளாறுகள் ஒருபுறமிருக்க, தீவிர பயம் மற்றும் கவலையை ஏற்படுத்தும் பொதுவான பதற்றம் மற்றும் சமூகப் பயம் போன்ற பதற்றக் கோளாறுகளும் மக்களைப் பெரிதும் பாதிக்கின்றன.

உலகளாவிய நெருக்கடி

 

மேலும், கற்பனையான மாயத்தோற்றங்களை ஏற்படுத்தும் ‘சிசோஃப்ரினியா’ போன்ற மனச்சிதைவு நோய்களும், விபத்து அல்லது உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளுக்குப் பிறகு ஏற்படும் ‘பி.டி.எஸ்.டி’ (PTSD) போன்ற அதிர்ச்சி சார்ந்த கோளாறுகளும் இதில் அடங்கும்.

இவ்வளவு பெரிய உலகளாவிய நெருக்கடி இருந்தபோதிலும், மனநல மேம்பாட்டிற்கான அரசாங்கங்களின் நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாகவே உள்ளது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த சுகாதார பட்ஜெட்டில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே மனநலத்திற்காகச் செலவிடப்படுகிறது.

உலக அளவில் மனநலப் பாதிப்புகள் அதிகரிப்பு: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்.! | Global Increase Mental Health Disorders Statistics

இதனால் ஏழை நாடுகளில் இதற்கான மருத்துவ வசதிகள் மிகக் குறைவாக உள்ளன.

2019ஆம் ஆண்டு தரவுகளின்படி பிராந்திய வாரியாகப் பார்க்கும்போது அமெரிக்காவில் அதிகபட்சமாக 15.6 சதவீத மக்களும், கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் 14.7 சதவீத மக்களும், ஐரோப்பாவில் 14.2 சதவீத மக்களும், தென்கிழக்கு ஆசியாவில் 13.2 சதவீத மக்களும் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு உலகளவில் பதற்றமும் மனச்சோர்வும் பல மடங்கு அதிகரித்துள்ளன.

உலகிலேயே போர்த்துகல் நாட்டில் தான் அதிகபட்சமாக 13.3 சதவீத மக்கள் பதற்றக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்; மனச்சோர்வைப் பொறுத்தவரை சிரியா நாடு முதலிடத்தில் உள்ளது.

இளைஞர்களின் மரணம்

‘த லான்செட்’ மருத்துவ இதழின் ஆய்வறிக்கையின்படி, உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 7,40,000 தற்கொலைகள் பதிவாகின்றன.

அதாவது, சராசரியாக ஒவ்வொரு 43 வினாடிக்கும் ஒரு நபர் தற்கொலையால் உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது.

15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மரணத்திற்கு தற்கொலை மூன்றாவது முக்கிய காரணமாக உள்ளதோடு, இளம் பெண்களின் மரணத்தில் இது இரண்டாவது பெரிய காரணமாகவும் இருக்கிறது.

உலக அளவில் மனநலப் பாதிப்புகள் அதிகரிப்பு: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்.! | Global Increase Mental Health Disorders Statistics

உலகளவில் பெண்களின் தற்கொலை விகிதத்தோடு ஒப்பிடும்போது, ஆண்களின் தற்கொலை விகிதம் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. பொதுவாகப் பெண்கள் தங்களின் மனநலப் பாதிப்புகளை மனச்சோர்வு மற்றும் பதற்றம் மூலம் உள்முகமாக வெளிப்படுத்துகின்றனர்.

ஆனால் ஆண்கள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் ஆளுமைக் கோளாறுகள் மூலம் அதனை வெளிப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அகதிகள் மற்றும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மக்கள் மத்தியில் தவறான முடிவெடுக்கும்  விகிதம் மிக அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button