பலதும் பத்தும்

முதலை வயிற்றில் 6 சோடி செருப்புகள்; மனித உடல் பாகங்கள், இரண்டு துண்டிக்கப்பட்ட கைகள்

தென்னாப்பிரிக்காவின் எம்புமலங்கா (Mpumalanga) மாகாணத்தில் உள்ள கோமாட்டி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், 59 வயதான ஓட்டல் அதிபர் கேப்ரியல் பாடிஸ்டா (Gabriel Batista) தனது காரோடு அடித்துச் செல்லப்பட்டார்.

அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர், ஆற்றுப் பகுதியில் அசையாமல் படுத்துக் கிடந்த 15 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட ஒரு ராட்சத முதலையைக் கவனித்தனர்.

முதலை வயிற்றில் 6 சோடி செருப்புகள்; மனித உடல் பாகங்கள், இரண்டு துண்டிக்கப்பட்ட கைகள் | 6 Pairs Of Slippers Found In A Crocodile Stomach

முதலையின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட காலணி

அந்த முதலையின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியிருந்ததைக் கண்ட அதிகாரிகள், ட்ரோன்கள் மூலம் ஆய்வு செய்த பிறகு அது பாடிஸ்டாவை விழுங்கியிருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.

இதையடுத்து, அந்த முதலையைக் கொன்று அதன் உடலை மீட்பதற்காக கேப்டன் ஜோஹன் பொட்ஜிட்டர் (Johan Potgieter) என்ற துணிச்சலான போலீஸ் அதிகாரி களமிறங்கினார்.

ஹெலிகாப்டரில் இருந்து ஒரு கயிறு மூலம் கட்டப்பட்டு, முதலைகள் நிறைந்த ஆற்றுக்குள் இறக்கப்பட்ட அவர், கொல்லப்பட்ட முதலையின் உடலை லாவகமாகப் பிணைத்து மேலே தூக்கினார்.

உயிருள்ள மற்ற முதலைகள் அருகில் சுற்றிக்கொண்டிருந்த போதிலும், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் அவர் செய்த இந்த வீரச் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்டெடுக்கப்பட்ட முதலையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தபோது, உள்ளே மனித உடல் பாகங்கள், இரண்டு துண்டிக்கப்பட்ட கைகள், விலா எலும்புகள் மற்றும் ஒரு மோதிரம் ஆகியவை கண்டறியப்பட்டன.

அந்த மோதிரத்தை வைத்து அது பாடிஸ்டா தான் என முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியாக முதலையின் வயிற்றுக்குள் பல்வேறு அளவுகளில் மற்றும் மாடல்களில் 6 ஜோடி காலணிகள் (Shoes) இருந்தன. இவை பாடிஸ்டாவுடையவை அல்ல என்பதால், அந்த முதலை இதற்கு முன்பு பலரைத் தாக்கி விழுங்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

முதலையின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட காலணிகளின் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறியும் பணியில் தற்போது தென்னாப்பிரிக்கப் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலைச் சரிபார்த்து, முதலையின் இரையான மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஓட்டல் அதிபரின் உடல் பாகங்கள் டி.என்.ஏ (DNA) சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இயற்கைச் சீற்றங்களின் போது ஆறுகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button