இதுவரை 20 விஞ்ஞானிகள்… அமெரிக்காவையும், சீனாவையும் உலுக்கும் மர்மம்

உலகின் தலைசிறந்த பாதுகாப்பு விஞ்ஞானிகள் சிலருக்கு விசித்திரமான ஒரு சம்பவம் நிகழ்ந்து வருவதாகவே அஞ்சப்படுகிறது.
சீனாவில், அவர்கள் நள்ளிரவில் நடக்கும் கார் விபத்துகளில் கொல்லப்படுகிறார்கள். அமெரிக்காவில், அவர்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு, அதிவேக ஆயுதங்கள், அணு ஆராய்ச்சி மற்றும் விண்வெளிப் பாதுகாப்பு உள்ளிட்ட இராணுவத் தொழில்நுட்பத்தின் உச்சத்தில் பணியாற்றியுள்ளனர்.
இது வெறும் தற்செயலா அல்லது நன்கு திட்டமிடப்பட்ட சதியா என்பது போன்ற கேள்விகள் தற்போது எழத்தொடங்கியுள்ளன. அமெரிக்காவில், அணு தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட ஆயுதங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்ட குறைந்தது 11 சம்பவங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசுக் கட்சிப் பிரதிநிதி எரிக் பர்லிசன் தெரிவிக்கையில், வெளிநாட்டு சதியாக இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அணு தொழில்நுட்பம், மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் நாம் சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் போட்டியிடுகிறோம்.
இதற்கிடையில், நமது தலைசிறந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள் என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்பும் உத்தரவிட்டுள்ளார். பசிபிக் பெருங்கடலுக்கு அப்பால், இதேபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றும் குறைந்தது ஒன்பது விஞ்ஞானிகள் மரணமடைந்ததாக சீன மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
பெரும்பாலான நிகழ்வுகள் விபத்துக்கள், திடீர் நோய்கள் ஆகியவற்றால் ஏற்பட்டவையாகக் கருதப்படுகின்றன; அல்லது விளக்கப்படாமலே உள்ளன. அந்த விஞ்ஞானிகளின் வயது 26 முதல் 68 வரை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் வழக்குகளில் ஒன்று, 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெய்ஜிங்கில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த, தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 38 வயதான பேராசிரியர் ஃபெங் யாங்ஹே என்பவருடையது.
வெளியான தகவலின் அடிப்படையில், அவர் அதிகாலை சுமார் 2.35 மணியளவில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சீன விஞ்ஞானிகளில் பலர், குறிப்பாக இராணுவ செயற்கை நுண்ணறிவு, அதிவேக ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட ஆயுத அமைப்புகள் போன்ற உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் துறைகளில் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()