பலதும் பத்தும்

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பாக் நீரிணையை நீந்திக் கடந்து சாதனை!

பாக் நீரிணை பகுதியை தனியாகவோ, குழுவாக மற்றும் மாரத்தான் முறையில் பலர் நீந்தி கடந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு அல்லது தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு கடந்துள்ளார்கள்.

இந்நிலையில், இந்தியாவின் சென்னையை சேர்ந்த சிறுவர்களான ஸ்ரீ அஷ்வத் (11 வயது), லவ் (09 வயது), குஷ் (09 வயது) மற்றும் தன்வேஷ் (10 வயது) ஆகிய நான்கு பேரும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் யாதவி விளையாட்டு அகாடமி மற்றும் இந்தியன் ஆட்டிசம் சென்டரில் நீச்சல் பயிற்சி பெற்று பல்வேறு நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இவர்கள் ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி வருவதற்கு இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடமும் அனுமதி கோரியிருந்தனர்.

அனுமதி கிடைத்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் பிற்பகல் 03.25 மணியளவில் நான்கு சிறுவர்களும் ரிலே முறையில் நீந்த தொடங்கி 17 கடல் மைல் தொலைவை 9 மணி 5 நிமிடங்கள் நீந்தி, நள்ளிரவு 12.30 மணிக்கு தலைமன்னார் சென்றனர்.

உடனே, அங்கிருந்து தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கி, நேற்று (19) காலை 9.27 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்தனர்.

இந்த சாதனைக்காக சிறுவர்கள் நால்வரும், மொத்தம் 34 கடல் மைல் தொலைவை நீந்தி கடக்க 18 மணி 02 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் நீந்த முடியும் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையில் அஷ்வத், லவ், குஷ், தன்வேஷ் ஆகிய நால்வருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *