முச்சந்தி
வல்லாதிக்க ஆக்கிரமிப்பு தோல்வி: மண்டியிடா ஈரான் மக்கள் வெற்றி!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

அமெரிக்கா–ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் லெபனானில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடவுள்ளது. இப்படித் தொடரும் இந்தப் போரின் குழப்பம், தவறுகள், அழிவு எவையும் இன்னமும் குறைந்து விடவில்லை. முக்கியமாக, ட்ரம்ப் பயன்படுத்திய கற்கால மனித மனோபாவம் இன்னும் தொடர்கிறது. அதாவது, போர் நிறுத்தம் வந்தாலும், அவரின் தவறான அரசியல் சிந்தனை மாறவில்லை.

எவ்வாறாயினும் தோற்காமல் இருப்பதன் மூலம் ஈரான் இந்த போரில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வெற்றிபெறாமல் இருப்பதன் மூலம் அமெரிக்கத் தரப்பு தோல்வியை தழுவியுள்ளது. இந்த மோதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாகத் தொடங்கியது. அவர்கள் ஈரானை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தனர். ஆனால், போர் விரைவில் அவர்களது கட்டுப்பாட்டை விட்டு வெளியேறியிருக்கிறது. ஈரான் ஹோர்மூஸ் நீரிணையை மூடியதால் உலக அளவில் எரிபொருளுக்கான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
ஈரானின் புவியியல் அத்துடன் அதன் போர் வியூகங்களை கட்டுப்படுத்தத் தெரியாமல் அமெரிக்கா யுத்தம் நடத்தியது. அது இறுதியில் அமெரிக்காவின் கண்களையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ஈரானைத் தோற்கடிப்பது இனிச் சாத்தியமில்லை. இதன் பொருள் என்னவென்றால், போரின் முடிவில் ஆயிரக்கணக்கான இழப்புகள் இருந்தபோதிலும், ஈரானே இறுதியில் வெற்றியாளராக மாறியுள்ளது. இந்த யுத்தத்தில் ஈரான் நேரடியாக தனித்து போரிட்டு வெற்றியீட்டி உள்ளது என்றும் கூறலாம்.
வல்லாதிக்க ஆணவத் தோல்வி
வளைகுடாவில் போர் நிறுத்தம் வந்த பின்னர், போரின் வெற்றியை இருதரப்பும் தமது எக்காள கொக்கரிப்பாக பிதற்றிப் கொண்டுள்ளனர். ஆனாலும் இந்தப் போர், அமெரிக்காவின் சக்தியை அதிகரிக்கவில்லை. மாறாக, அதன் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாக உலகின் பொலிஸ்காரனாக, தானாகவே உருவாக்கிய பிம்பத்தை அமெரிக்க உடைத்துள்ளது. உலக நாடுகள், அமெரிக்கா மீதான நம்பிக்கையை பாரியளவில் இழக்க ஆரம்பித்துள்ளன. இதன் விளைவாக சீனா உலக அரங்கில் தனது செல்வாக்கினை மேம்படுத்தி வருகிறது.
கொரியா, வியட்நாம், கியூபா, ஈராக் படிப்பினைகளை அமெரிக்கா தொடர்ந்து புறக்கணித்து வந்ததன் விளைவாகவே தற்போது ஈரானில் தடம் புரண்டுள்ளது. நீண்ட காலகட்டத்தில் தனக்குத் தோல்வி தரும் அணுகுமுறைகளை தொடர்ந்தும், இன்றும் கையாள்வது ஒரு பேரரசின் வீழ்ச்சிக்கான படிக்கட்டுகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் செத்த பாம்பை தொடர்ந்து அடித்ததை போலவே தெஹ்ரானை கொடுமையாக தொடர்ந்து தாக்கியது. இறுதியில் ஈரான் வீழ்ச்சி அடைந்ததா ? அல்லது இன்னும் வலுவாக மாறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை பார்த்தால், அமெரிக்காவின் தோல்வி இலகுவாக புலப்படும்.
இந்தப் போர் எப்படி ஆரம்பித்தது?
ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் வலுப் பிரயோகம், சக்தி, பலம் போன்றவை தான் உலகத்தை நிர்ணயிக்கிறது என்ற நம்பிக்கை உடையவர்கள். ட்ரம்ப் பயன்படுத்திய ஒரு நாகரிகம் முழுவதும் அழிந்து போகலாம் போன்ற மிரட்டல்கள் மனித மாண்பினைச் சிதைத்தன. இங்கு நவீன அறிவியல் இராஜதந்திரம் இல்லை. பழமையான, கற்கால சிந்தனைப் போக்கு மேலெழுந்தது.
நாங்கள் எல்லா இலக்குகளையும் அடைந்தோம், வெற்றி பெற்றோம் என ட்ரம்ப் சொன்னாலும், ஆயிரக்கணக்கான பொது மக்களே இந்தப் போரினால் உயிரிழந்து உள்ளார்கள். பல்கலைக்கழகங்கள், கலை கலாச்சாரப் பேணிடங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் செல்வாக்கு உலகளாவிய ரீதியில் கேலிக்குள்ளாக்கப் படுகின்றது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி உருவாகிப் பொதுமக்கள் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

என்னதான் இராணுவ ரீதியாக இருந்தாலும், ஈரான் நாட்டிற்கு எதிரான ட்ரம்ப் விடுத்த அநாகரிக அச்சுறுத்தல் உலக வரலாற்றில் மிகப்பெரிய கறை படிந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஈரானின் விளக்குகள் எல்லாம் அணைந்து விடும், நாடே இருளில் மூழ்கும், ஒரு நாகரீகமே அழிந்துவிடும் என்ற ஆணவ வசனங்களால் உலகையே பதட்டம் கொள்ளச் செய்தார்.
ஈரான் மக்கள் காட்டிய வெளிச்சம்
ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் வெளியானதன் பின்னர், நிச்சயம் அந்த இரவு உலகில் பலருக்குமே தூக்கமில்லா இரவாகத் தான் அமைந்திருக்கும். ஆனால் ஈரான் மக்கள் பயத்தின் இருளுக்குள் சென்றிடவில்லை, ஒரு அங்குலமும் அவர்கள் பின்வாங்கவில்லை. அவர்கள் தாங்கள் தான் ஈரான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உலகிற்கே உணர்த்தினார்கள். அந்த இரவின் பொழுதில் அவர்கள் காட்டிய வீரம் என்பது வரலாற்று நிகழ்வாகவே தோன்றியது.
ஈரானில் இஸ்பஹானின் மூடுபனியில் இருந்து தப்ரிஸ் நகரின் தொழில்துறை பகுதிகள் வரை மக்களால் வரலாறு எழுதப்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் மனித மதில் சுவர்களாக மாறினார்கள். தாக்குதலுக்கான இலக்குகளாக அவர்களே உருமாற்றம் பெற்றார்கள். தெஹ்ரானில், தபியத் பாலம் நள்ளிரவு கீதத்தின் மேடையாக மாறியது. அங்கு தார் இசையின் தாளங்களூக்கு கலைஞர்கள் நடமனாடினார்கள். உலகமே பதட்டத்தில் உறைந்து கிடக்கும் நேரம் அவர்கள் இசையும் நடனமுமாக லயித்திருந்தார்கள்.
முழுமையான அழிவு என்ற அச்சுறுத்தலுக்கு எதிரான பண்பாட்டு எழுச்சி. மின் நிலையங்களை ஒளிக் காட்சியகங்களாகவும், பாலங்களை மனித சங்கிலிகளாகவும் மாற்றிய மக்கள், “Power Plant Day” என்ற தாக்குதல் தர்க்கத்தை மக்கள் தைரியத்தின் ஒளியால் செயலிழக்கச் செய்தனர். ஆம் உலகில் மீண்டும் பாரசீக கலாச்சாரத்தை காத்தனர்.
பாரினை ஆண்ட பாரசீகம்:
இருளை ஒளியால் வென்ற ஈரான் மக்களைப் போல, பயம் அல்ல, அன்பே என்றனர். அழிவு அல்ல, கருணை என்றனர். போர் அல்ல, மனிதம் இவையே உலகை காக்கும் சக்திகள் என்றனர். ஈரான் முழுவதுமே எதிர்ப்பு பல்வகைமைகள் கொண்டாதாக, விரிவானதாக ஒன்றை விட ஒன்று வீரியமானதாகவே இருந்தது. ஒவ்வொரு நகரமும் தேசிய பாதுகாப்பின் ஓர் நூலாக தன்னை நெய்தது. புஷேர் நகரின் தெற்கில், மாணவர்களும் தொழிலாளர்களின் குடும்பங்களும் அணு நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் பெரிய சுவரோவியங்களை வரைந்தனர். அவை மேலே பறக்கும் விமானிகளுக்கும் செயற்கைக் கோள்களுக்கும் அமைதியின் செய்திகளை வெளிப்படுத்தின.
கெர்மான்ஷா மற்றும் அஹ்வாஸ் நகரங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி, மருத்துவமனைகளையும் வீடுகளையும் சுற்றி அரன் அமைத்தனர். தங்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப் படுத்தும் மின் நிலையங்களின் வாயில்களை விட்டு நகர மறுத்தனர். இவை ஒளியின் கவசங்கள் என அழைக்கப்பட்டன. வீதிகள் எங்கும் உணர்வின் மணமும், கவிதை வாசித்தலின் ஓசையும் காற்றில் நிரம்பியிருந்தது.
அலி காம்சாரி மற்றும் பென்யாமின் பகதூரி போன்ற கலைஞர்கள் சாதாரண மக்களுடன் தோளோடு தோள் நின்று முழக்கத்தை தெருக்களில் எழுப்பினர். மக்களின் இதயத் துடிப்பு உலகம் முழுவதிலும் கலைஞர்கள் ஒலிக்கச் செய்தார்கள். இந்த வரலாற்றுச் செயல்பாடு ஒரு தற்காலிக பாதுகாப்பை விட ஒரு படி மேலே சென்றது. இதுவே பாரசீக மக்களின் மரபு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
ஈரானிய மக்கள் ஒற்றுமை:

ஒன்றரை கோடி மக்கள் ஒரு இரவில் தங்களின் நாட்டை காக்க முதல் முறையாக கூடினார்கள். ஈரான் மக்கள் ஒன்றுகூடிய அந்த தருணம் 21ஆம் நூற்றாண்டின் மறக்க முடியாத நிகழ்வாகும். எங்கள் பாலங்கள், எங்கள் மின் இணைப்புகள் என்ற அவர்களின் முழக்கம், நேரடி பதிலாக அமைந்தது. கலை மூலம் தெருக்களையும், இசை மூலம் தொடுவானத்தையும் நிரப்பிய ஈரானியர்கள், போர் இயந்திரங்களுக்கு எதிராக தங்களின் அசாத்திய எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள்.
போர்களை இந்த உலகம் மறுபரீசீலனை செய்ய வேண்டும் அதுவே அப்பாவி மக்கள் இந்த உலகிற்கு விடுக்கும் செய்தியாகும். உலகம் முழுவதும் நடைபெற்ற எல்லா போர்களிலும் எளிய மக்களும் அவர்களது உடமைகளும் அவர்களது வாழ்வாதாரமுமே முதன்மையாக பாதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வு தான் மிகுதியாக சிதைந்துள்ளது.
அமெரிக்காவின் இராஜதந்திர தோல்வி:
அமெரிக்காவிற்கு இது ஒரு யுத்தத் தோல்வி மட்டுமல்ல. அமெரிக்காவுக்கு பெரும் இராஜதந்திர நெருக்கடியும், இராஜதந்திரத் தோல்வியும் ஆகும்.
ஒரு புறம் அமெரிக்கத் தலைவர் தனது வாயால் உலகின் வெறுப்பை சம்பாத்தித்துக் கொண்டே செல்லும் அதே வேளை ஈரான் அதிபரின் உரைகள் நாகரீக இராஜதந்திரம் மிகுந்த கருத்துக்களால் உலகைக் கவர்ந்து கொண்டிருகின்றது. அமெரிக்க மக்களுக்கு எழுதப்பட்ட ஈரான் அதிபரின் கடிதம் அதற்கொரு சிறந்த உதாரணம்.
போரின் இறுதியில் ஈரான் மக்களின் தைரியம், கலாச்சாரத்தின் ஒளி, மனித நேயத்தின் சக்தி எல்லாம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வுகள் பெரிய உண்மையையும் வரலாற்றையும் வெளிப்படுத்தி உள்ளன.

போர் எந்தக் காலத்திலும் ஒரு தீர்வு அல்ல. அன்பும் மனித நேயமும் தான் இறுதி தீர்வு. மனிதர்கள் உருவாக்கிய எல்லா மதங்களும், எல்லா எல்லைகளும், எல்லா வேறுபாடுகளும் ஒரு பக்கமிருக்க, ஒவ்வொரு உயிரும் மதிப்புக்குரியது என்பதே உலகம் மறக்கக் கூடாத உண்மையாகும்.
மதம், இனம், மொழி, நாடு, இவை எல்லாம் மனிதன் உருவாக்கிய அடையாளங்கள். ஆனால் உயிர் என்பது இயற்கை நமக்குத் தந்த ஒரே உண்மையான அடையாளம். அதை மதிப்பதே நம் கடமை. உலகம் முழுவதும் அப்பாவி மக்கள்தான் போர்களின் முதல் பலி. அதனால் தான் போர் முடிவுகளை உருவாக்காது. இதனை உணர்ந்து அமெரிக்கா எதிர்காலத்தில் அமைதியை பேணுமா அல்லது மீண்டும் போர்முகம் கொண்டு அலையுமா என்பதை அமெரிக்க மக்களே தீர்மானிக்க வேண்டும்.
![]()