சிக்கலைத் தீர்த்தால் எல்லாம் செழிக்கும்!… கவிதை… ஜெயராமசர்மா

மண்ணும் வானும் மோதிக் கொண்டன
மரங்கள் செடிகள் பயிர்கள் வதங்கின
மழையை வானம் வழங்கிட மறுத்தது
செய்வது அறியா திகைத்தது மண்ணும்
நீர்நிலை அனைத்தும் வற்றியே போனது
குடிநீர் கூட அரிதாய்ப் போனது
வற்றிய நதியில் மணலே கிடந்தது
சுற்றிலும் பசுமை பாலையாய் ஆனது
மண்ணுள் கிடந்த விதைகள் கலங்கின
வளர்ந்த பயிர்கள் தளர்ந்து விழுந்தன
மரங்களின் இலைகள் சருகாய் கொட்டின
இரங்கா வானம் எல்லாம் பார்த்தது
மண்ணில் வரட்சி கடுமை ஆனது
மழைகாணா மண்ணும் கலங்கியே நின்றது
பறவைகள் மரங்கள் பயிரெலாம் சேர்ந்து
சமாதானம் பேசிட தீர்மானம் எடுத்தன
வானிடம் சமாதானம் பேசிடச் சென்றன
மண்ணும் முடிவில் ஒத்துக் கொண்டது
ஒன்றாய் இணைந்து மன்னிப்புக் கேட்டன
இரங்கிய வானம் இறுகவே அணைத்தது
மறுத்த மழையை வானம் கொடுத்தது
மழையினைக் கண்டதும் மண்ணும் மகிழ்ந்தது
வானை மண்ணும் வாழ்த்தியே நின்றது
மண்ணில் வளமும் பெருகியே நின்றது
வானும் மண்ணும் பூமியின் எல்லை
எல்லைக்குள் சண்டைகள் வந்தால் சிக்கலே
சிக்கலைத் தீர்த்தால் எல்லாம் செழிக்கும்
என்பது உண்மை இருத்துவோம் மனத்தில். !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
சரியான நேரத்தில் சரியான பதிவு.