பலதும் பத்தும்

இலங்கை வைத்தியசாலையில் அதிசய அறுவை சிகிச்சை

முருங்கைக்காய் பறிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி, இரும்புக்கம்பி உடலைத் துளைத்த நிலையில் மரணப் போராட்டத்திலிருந்த ஒருவரின் உயிரை பதுளை வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளனர்.

37 வயதுடைய நபர் ஒருவர் முருங்கை மரத்தில் ஏறி முருங்கைக்காய் பறிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக மரக்கிளை முறிந்துள்ளது.

இதனால் அவர் கீழே இருந்த கொன்க்ரீட் மதில் ஒன்றின் மீது விழுந்துள்ளார். இதன்போது மதிலில் நீட்டிக்கொண்டிருந்த இரும்புக்கம்பி ஒன்று, அவரது வயிற்றுப் பகுதியைத் துளைத்து முதுகின் வழியாக வெளியே வந்துள்ளது.

மிகவும் ஆபத்தான நிலையில் அவர் பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டார்.

விபத்தின் தீவிரத்தை உணர்ந்த வைத்தியக் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டனர்:

அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர்,

முதலில் உடலுக்கு வெளியே நீண்டிருந்த இரும்புக்கம்பியின் ஒரு பகுதியை வெட்டி அகற்றினர்.

பின்னர் அவர் அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, உடலின் உள் உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு உட்புறம் இருந்த இரும்புப் பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டன.

மிகவும் நுணுக்கமான இந்த அறுவை சிகிச்சையைச் செம்மையாகச் செய்து முடித்து, அந்த நபரின் உயிரை மீட்டெடுத்த பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினருக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட நபர் தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *