எப்பவும் புனிதராய் இப்புவி மலர்வார்!… ஜெயராமசர்மா

கல்லால் எறிந்தார் காறியும் உமிழ்ந்தார்
சொல்லால் வதைத்தார் சொல்லொணாச் செய்தார்
சிலுவையில் அறைந்தார் சிதைத்தார் அவரை
அனைத்தும் பொறுத்தார் அவனியில் உயர்ந்தார்
முள்முடி வைத்தார் முகத்தில் அறைந்தார்
கள்வனைப் போல இழுத்துமே போனார்
சவுக்கா லடித்தார் ஆணியால் அறைந்தார்
சகலதும் தாங்கினார் புனிதராய் மலர்ந்தார்

நஞ்சுடை பாலைக் குடித்திடச் சொன்னார்
மதயானை முன்னால் படுக்கவும் வைத்தார்
நீற்றறை உள்ளே பூட்டியும் வைத்தார்
கல்லுடன் கட்டிக் கடலிலும் போட்டார்
இத்தனை செய்தும் ஏற்றிட்டார் ஒருவர்
இறைவன் மீதவர் நம்பிக்கை வைத்தார்
சித்தரு மல்லர் யோகியு மல்லர்
அப்பராம் ஆண்டவன் அடியா ராவர்
உண்ணா நோன்பை உயர்வாய் எண்ணினார்
உண்மையை உயிராய் உணர்ந்துமே நின்றார்
சத்தியம் நேர்மை உத்தமம் என்றார்
சமத்துவம் என்பதைத் தத்துவ மாக்கினார்
சிறையி லடைத்தார் சிதைத்தார் மனத்தை
மனத்துடன் உடலையும் வாட்டியே எடுத்தார்
பொறுத்தார் பொறுத்தார் பொறுமை காத்தார்
புவியில் மகாத்மா ஆகியே ஒளிந்தார்
புவியினில் பிறப்பார் எல்லாம் மனிதரே
புனிதராய் எவரும் பிறப்பதே இல்லை
உற்றநோய் நோற்பார் உயிர்க்குறுகண் செய்யார்
எப்பவும் புனிதராய் இப்புவி மலர்வார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமைழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()