கட்டுரைகள்

நினைத்ததை நடத்தியே முடிப்பவர் யார்?… நியூசிலாந்து சிற்சபேசன் 

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும், ஐந்து ஆண்டுகளுக்கொரு தடவை நடைபெறுகின்ற சட்டமன்றத்தேர்தல் விரைவில் நடைபெறவேண்டும். அதனால், தேர்தல் தொடர்பான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

2021லே தேர்தல் நடைபெற்றபோது, மார்ச் 12லே தேர்தல் தொடர்பான பூர்வாங்க அறிவிப்பு வெளியாகியது. ஏப்ரல் மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த ஆண்டு தாமதமாகின்றது.

தேர்தலை எதிர்கொள்கின்ற மாநிலங்களிலே பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன. வாக்காளர்களைக் கவரக்கூடிய முக்கியமான அறிவிப்புக்களை அத்தகையகூட்டங்களிலே பிரதமர் வெளியிடுகின்றார்.

கடந்த செப்டெம்பரில் பெண்களுக்கு ரூ10,000 வழங்குகின்ற திட்டத்தை பீகாரிலே பிரதமர் ஆரம்பித்துவைத்தார். அதன்பின்னரே, அக்டோபர் 6ல் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று, பிரதமர் மோடியின் பொதுகூட்டங்கள் முடிவடைந்த பின்னரேயே தேர்தல் அறிவிப்பு வெளியாகலாமெனக் கருதப்படுகின்றது.

2026 சட்டமன்ற தேர்தல்.. மாறிய கூட்டணி கணக்குகள் | TVK Vijay | CM Stalin |  NTK Seeman | SPOTLIGHT

தேர்தல் திகதி அறிவிக்கப்படாவிட்டாலும்கூட, தேர்தலுக்கான முஸ்தீபுகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. மாநில ஆளுனர்கள் மாற்றப்படுகின்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு பெரிய அணிகள் உருவாகியுள்ளன. ஒன்று, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அணியாகும். மற்றையது, என்டிஏ கூட்டணி என்று சொல்லப்படுகின்ற, எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதாக் கட்சி உள்ளிட்ட தரப்புக்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகும்.

இந்த இரண்டு அணிகளுக்கு வெளியே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் காணப்படுகின்றது.

ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியிலே காங்கிரஸ், வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட 26 கட்சிகள் உள்ளன.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியே சிந்தாமல் சிதறாமல், தொடர்ச்சியாக, நான்காவது தேர்தலைச் சந்திக்கின்றது. மேலதிகமாக, புதிய கட்சிகளையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றது. அதனால், வலுவான அணி என்னும் தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது.

கூட்டணி தொடர்பிலே தேசியக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளே இரண்டு பெரிய கழகங்களுக்கும் சவாலானதாகும். அதிலேயும், டெல்லியிலே ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற தரப்புடன் பேசுவது “கல்லிலே நார் உரிப்பது” போன்றதாகும்

அந்தவகையிலேயே, திராவிட முன்னேற்றக் கழகத்துடனான காங்கிரஸ் கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் கவனிப்பைப் பெற்றன.

40 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வேண்டும், மாநில ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்னும் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. கூட்டணி ஆட்சி என்னும் கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டது. 25 தொகுதிகள் ஒதுக்கலாம் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடாகியது.

அதனால், கூட்டணி உடைந்து விடலாம் என்னும் பிம்பத்தை ஏற்படுத்துகின்ற வகையிலே காட்சிகள் விரிந்தன. பேச்சுவார்த்தை தோல்வியடைவதான தோற்றப்பாடு ஏற்பட்டது. அத்தகையதொரு சூழலிலே, மூத்த தலைவர்களும் களமிறங்கினார்கள்.

அதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்கின்றது. 28 சட்டப்பேரவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி ஆசனமும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.

Tamil Nadu Election Results 2026 – Constituency Wise Winners : தமிழ்நாடு சட்டமன்றத்  தேர்தல் முடிவுகள் 2026 – தொகுதி வாரியாக விவரங்கள் - Samayam Tamil

2016ம் ஆண்டிலே, திமுக கூட்டணியிலே 41 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், எட்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினால் வெற்றி பெறமுடிந்தது.

2021ம் ஆண்டிலேயும் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடர்ந்தது. ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக குறைத்துவிட்டது. 25 தொகுதிகளே ஒதுக்கப்பட்டன. ஆனாலும்கூட, 18 தொகுதிகளிலே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது.

அதனாலேயே, திமுகவுடன் மல்லுக்கட்டி 28 தொகுதிகளை தற்போது பெற்றுக்கொண்டிருக்கின்றது.

மறுவளத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதாக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பு, டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே.வாசனின் தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி போன்றவை உள்ளன.

3 முதல் 5 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு!இதனிடையே, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயாக கூட்டணியிலே சேர்த்துக்கொள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் டெல்லியின் அதிகாரத்தரப்பு விரும்புகின்றது. ஆட்சியிலே பங்கு, இரண்டரை ஆண்டுகாலம் முதலமைச்சர் பதவி போன்ற கவர்ச்சியான மிட்டாய்கள் விஜய்க்கு காட்டப்படுகின்றன.

ஆனால், விஜய் தரப்பைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியின் மாநில மட்டத் தலைவர்களுமே விரும்பவில்லை. கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

இருந்தாலும்கூட, “நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்! நான்! நான்! – துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான்!” என்ற பாடலின் ஒலி டெல்லியிலிருந்து செவிப்பறையைக் கிழிக்கின்றது.

இதிலே, நினைத்ததை நடத்தியே முடிப்பவர் யார்? என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *