முச்சந்தி

தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் குர்திஷ் படை… ஈரானில் குர்துக்களை பயன்படுத்தும் அமெரிக்கா!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

மத்திய கிழக்கில் ஏற்கனவே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய அரசாங்கத்தை உள்ளிருந்தே பலவீனப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா உள்நாட்டுப் போரை அங்கு தூண்டத் திட்டமிட்டுள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ , ஈராக்கில் இயங்கும் குர்திஷ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி, ஈரானுக்குள் ஒரு பாரிய கிளர்ச்சியை உருவாக்க வியூகம் வகுத்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
குர்திய படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கினர் என்றும், அஜர்பைஜான் அரசு எல்லையில் துருப்புக்களைக் குவித்துள்ளது என்றும் மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய எல்லையில் குவியும் குர்திஷ் படைகள், அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு அமைவாக, குர்திஷ்தான் சுதந்திரக் கட்சியின் ஆயுததாரிகள் ஈரானின் எல்லைப் பகுதியான சுலைமானியா மாகாணத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய அந்த அமைப்பின் முக்கிய அதிகாரி கலீல் நாதிரி , தமது படைகள் ஈரானுக்குள் ஊடுருவத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குர்திஷ் படை தரைவழித் தாக்குதல்:
ஈரானைச் சுற்றியுள்ள நிலைமை தற்போது வேகமாக மாறியுள்ளது. ஈராக்கிய பிரதேசத்திலிருந்து செயல்படும் குர்திஷ் படைகள் தரைவழித் தாக்குதலைத் தொடங்க உள்ளன. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் நிலைகளை எடுத்து வருகின்றனர், இப்போது படிப்படியாக ஈரானிய பிரதேசத்திற்குள் முன்னேறி வருகின்றனர். ஈரானிய குர்திஷ் படைகள் ஈரானிய ஆட்சி நிலைகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்று CPFIK அல்லது ஈரானிய குர்திஷ் அரசியல் படைகளின் கூட்டணி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
CIA உட்பட மேற்கத்திய உளவுத்துறை சாத்தியமான ஒருங்கிணைந்த ஆட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆராய குர்திஷ் தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக கூறப்படுகிறது. ஈரான் புரட்சிகர காவல்படை இலக்குகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஈராக்கிய குர்திஷ் தானில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் உட்பட சமீபத்திய மாதங்களில் ஈரானிய குர்திஷ் அமைப்புகளின் அதிகரித்த செயல்பாட்டை சர்வதேச பார்வையாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு கூறப்படும் தரைவழி நடவடிக்கையின் அளவை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. ஒருங்கிணைந்த குர்திஷ் தரைவழித் தாக்குதல் ஈரானிய ஆட்சிக்கு எதிராக மூன்றாவது முன்னணியை உருவாக்கக்கூடும் என்றும், பிராந்திய விரிவாக்க அபாயத்தை கணிசமாக உயர்த்தக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேவேளை ஈராக்கிய குர்திஷ்தானில் ஈரானிய எதிர் தாக்குதல்கள் மற்றும் துருக்கியின் ஈடுபாடு இன்னும் சாத்தியமாகும். அதே நேரத்தில், ஈரானிய எல்லைக்கு அருகில் குர்திஷ் பிரிவுகள் கட்டமைக்கப்படுவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தில் தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்க பின்வாங்கி வருகிறது.
பாரசீகத்தில் பாரிய தரைவழி தாக்குதலின் அதிக ஆபத்தை குறிப்பிட்டுள்ளார். பல குர்திஷ் அரசியல் படைகள் முன்பு ஒரு கூட்டணியில் ஒன்றிணைந்தன. ஒவ்வொன்றும் அதன் சொந்த ஆயுதப் பிரிவுகளுடன் இயங்கி வருகின்றன. அவை அனைத்தும் ஈராக்கிய குர்திஸ்தானில் தங்கள் படைகளை குவித்து, சிறிது காலமாக ஒரு தீவிரமான நடவடிக்கைகளுக்குத் தயாராகி வந்தன. இந்தப் பின்னணியில், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து ஆதரவு கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குர்திஷ் பிரிவுகளுக்கான நிதி மற்றும் நேரடி இராணுவ உதவி ஆகியவை அடங்கும். அத்தகைய வளர்ச்சி ஈரானிய ஆட்சியை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டிற்குள் இன மோதல்களின் சங்கிலி எதிர்வினையையும் தூண்டும் என்று சில மேற்கத்திய ஊடக ஆய்வாளர்கள் எச்சரித்தனர். அதே நேரத்தில், வடக்கு எல்லைகளிலும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும் அஜர்பைஜான் அரசு தனது படைகளை தீவிர போர் தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் ஈரானுடனான எல்லையில் அதன் இருப்பை அதிகரித்துள்ளது. இராணுவ விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு எதிர்-ட்ரோன் அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஈரானிய பிரதேசத்தில் அஜர்பைஜான் படைகள் முன்னேறுவது குறித்து எந்த தகவலும் இல்லை.
ஈரானில் ஊடுருவலைத் தொடங்க குர்துகளுக்கு உதவ அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும், அல்லது அங்கு எந்த வகையான கிளர்ச்சியும், போரில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். போதுமான அளவு பெரியதாக இருந்தால், ஊடுருவல் ஈரானிய இராணுவப் பிரிவுகளை பதிலளிக்க கட்டாயப்படுத்தக்கூடும், அமெரிக்க அல்லது இஸ்ரேலிய விமானங்கள் அவர்களை குறிவைக்க அனுமதிக்கும்.
ஈராக் மற்றும் சிரியாவில் குர்திஷ் போராளிப் படைகளுடன் இணைந்து பணியாற்றுவதில் அமெரிக்கா நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரானின் சில பகுதிகளில் பரவியுள்ள ஒரு இனக்குழுவான குர்துகளை கைவிட்டதற்கான அவப்பெயரை அமெரிக்கா கொண்டுள்ளது. 1991 பாரசீக வளைகுடாப் போருக்குப் பிறகு, அமெரிக்கா ஈராக்கில் குர்திஷ் எழுச்சியை ஊக்குவித்தது, ஆனால் பின்னர் ஈராக்கி இராணுவம் குர்திஷ் படைகளை படுகொலை செய்தபோது உடன் நின்றமை அறிந்ததே.
நாடற்ற குர்திஷ் மக்கள்:
மத்திய கிழக்கில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமான குர்திஷ் மக்கள் தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வட ஈராக், வடமேற்கு ஈரான், தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர். ஆயினும் தாயகம் இல்லாத மிகப்பெரிய இனக்குழுவான குர்திஷ் மக்கள் துருக்கியிலும், சிரியாவிலும் பிற இடங்களிலும் நீண்டகாலமாக துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
ஐந்து நாடுகளில் சிதறி வாழும் குர்திஷ் மக்களின், பேரிடியாக ஐந்து நாடுகளிலுமே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட இனமாக கருதப்படுகின்றனர். இதன் விளைவாக விடுதலை போராட்டத்திற்கும் தள்ளப்பட்டார்கள்.
ஈரானுக்கு எதிராக தரை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கவால் பயன்படுத்தப்படும்
குர்திஷ் இனத்தினரின் தனி நாட்டினை உருவாக்கும் முயற்சியை அமெரிக்கா தனது தேவைக்காக பயன்படுத்துவதுடன், குர்திஷ் இயக்கங்களுக்கு ஆயுத பயிற்சி, நிதி வழங்குதல் போன்றவற்றினை சிஐஏ மேற்கொண்டு வருவதனால் அமெரிக்காவின் கொத்தடிமைகளாக தொடர்ந்து உள்ளனர்.
2003 ஈராக்கில் சதாம் ஹுசைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொண்டபோது, குர்திஷ் போராளிகள் அமெரிக்காவுக்கு வழங்கிய பங்களிப்பு பிரதானமானது.
அதுபோல் 2011 லிருந்து சிரியாவில் பசர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் குர்திஷ் போராளிகள் அமெரிக்காவினால் களம் இறக்கப்பட்டனர்.
அதன் பின்னர் 2014 க்கு பின்பு சிரியாவில் இஸ்லாமிய அரச இயக்கத்துக்கு எதிராக குர்திஷ் இயக்கத்தினர் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டனர். ஆனாலும் இதுவரையில் அமெரிக்காவினால் குர்திஷ்களுக்கான தனி நாட்டினை அமைத்துக்கொடுக்க முடியவில்லை.
தற்போது ஈரானுக்கு எதிராக அமெரிக்கா – இஸ்ரேல் ஆரம்பித்துள்ள போரில் இவ்விரு நாடுகளும் எதிர்பார்த்த இலக்கினை இதுவரை அடைய முடியவில்லை. ஈரானிடமிருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பாராத இழப்புக்களை எதிர்கொண்ட நிலையில், குர்திஷ் போராளிகள் மூலமாக ஈரானுக்குள் தரைவழித் தாக்குதலை ஆரம்பிக்கும் முயற்சியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இறங்கியுள்ளது.
இதற்காக ஈரானிய குர்திஷ்தான் ஜனநாயக கட்சி முஸ்தபா ஹிஜ்ரியுடனும் மற்றும் ஈராக்கில் உள்ள குர்திஷ் இயக்க தலைவர்களுடனும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குர்திஷ் இயக்கங்களுக்குள் இஸ்ரேலின் மொசாட்டும் ஆழ ஊடுருவியுள்ளதுடன், பெருமளவான ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தரைவழி தாக்குதல் முயற்சியை முறியடிக்கும் பொருட்டு ஈரான் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக ஈரானின் ஏராளமான படைகளை ஈரானின் வட மேற்கு எல்லையில் குவித்துள்ளதுடன், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள குர்திஷ் இயக்கங்களின் நிலைகள் மீது ஈரான், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.
தனித்து நிற்கும் ஈரான்:
ஈராக்கிய எல்லைகளில் குர்திஷ் போராளிகளின் நகர்வுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து ஈரான் கடும் பதற்றமடைந்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குர்திஷ் தலைவர் தலாபானியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, எல்லையில் இடம்பெறும் “பயங்கரவாத நகர்வுகள்” குறித்துக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆயினும், ஈரானின் செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ , குர்திஷ் போராளிகள் ஈரானுக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியாகும் செய்திகளை முற்றாக மறுத்துள்ளது. ஈலாம், கெர்மன்ஷா மற்றும் மேற்கு அசர்பைஜான் ஆகிய எல்லைப் பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும், இது அமெரிக்க ஊடகங்களின் உளவியல் ரீதியான பொய்ப்பிரச்சாரம் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய-குர்திஷ் கட்சிகளின் கூட்டணியும் தாம் தரைவழித் தாக்குதல்களை இன்னும் ஆரம்பிக்கவில்லை எனத் தந்திரோபாயமாகக் குறிப்பிட்டுள்ளது.
ஈரானில் வான்வெளித் தாக்குதல்களை விட, உள்நாட்டில் சிறுபான்மையினரான குர்திஷ் மக்களைப் பயன்படுத்தி அமெரிக்கா முன்னெடுக்கும் இந்த தரைவழி ‘உள்நாட்டுப் போர்’ வியூகம், ஈரானிய அரசாங்கத்திற்கு ஒரு மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்பதே சர்வதேச அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *