முச்சந்தி

அமெரிக்காவிற்கு ஆயுத பற்றாக்குறை!… ஈரானுக்கு எதிரான போர் எதுவரை?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானுக்கு எதிரான போர் எதுவரை தொடரும் என்பதை அமெரிக்க அதிபர் இதுவரை திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் ஈரானில் ஆட்சி மாற்றம் வரும் வரை என்றும் தெரிவித்தார். பின்னர் ஈரானின் புதிய தலைவரை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார். இந்த நிலையில் அமெரிக்காவிற்கு ஆயுத பற்றாக்குறை இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்)
ஈரானுக்கு எதிரான போரில் போதுமான ஆயுதங்களை விநியோகிக்க முடியாமல் பென்டகன் அதிகாரிகள் தடுமாறிவரும் நிலையில், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் ஜனாதிபதி டிரம்ப் மேலதிக விநியோகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். 2026 மார்ச் தொடக்கத்தில் ஈரான் மீதான தாக்குதல்களை (Operation Epic Fury) அமெரிக்கா தொடங்கியுள்ள நிலையில், இந்த நீண்ட காலப் போரில் ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் (Pentagon) மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரானில் ஒரு வாரத்திற்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படையினரின் தாக்குதல் மற்றும் தற்காப்புப் பணிகளில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைப் பயன்படுத்தி, ஈரானில் 2,000 க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன. ஈரான் மீது டோமேஹொக் (Tomahawk) குரூஸ் ஏவுகணைகள் மழையாக பொழிந்து வருகிறது. இந்த நிலையில் பதிலடியாக ஈரான் பாலிஸ்டிக்ஏவுகணைகள் மற்றும் ஷாஹேத் ட்ரோன்களை வளைகுடா நாடுகள் மீது ஏவி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆனாலும் அமெரிக்காவிடம் மற்ற வகை ஆயுதங்கள் ஏராளமாக இருந்தாலும், ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களைத் தடுப்பதற்கான நவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளில் (Interceptors) தற்காலிக பற்றாக்குறை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், சவுதி, ஐக்கிய அரபு இராச்சியம், கத்தார், குவைத், பஹ்ரேன் போன்ற நாடுகள் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
அமெரிக்கவுக்கு ஆயுத பற்றாக்குறை?
போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் நுழையும் நிலையில், அமெரிக்காவால் இந்தப் பிராந்தியத்தில் தனது நட்பு நாடுகளுக்கு ஆயுதம் வழங்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் ஈரானின் தொடர்ச்சியான தாக்குதலிலிருந்து பாதுகாப்பை வழங்க முடியுமா என்பது குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.
மார்ச் 2026 கள நிலவரப்படி வான் பாதுகாப்பு ஏவுகணைகள் (Air Defense Interceptors – THAAD (Terminal High Altitude Area Defense) மற்றும் பட்ரியோட் (Patriot) ஏவுகணைகள் அடங்கிய முக்கிய ஆயுதப் பற்றாக்குறைகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளன. ஜூன் 2025இல் நடந்த 12 நாள் போரிலேயே அமெரிக்கா தனது தாட் தடுப்பு ஏவுகணை கையிருப்பில் 25% ஐப் பயன்படுத்தியது. இந்த ஏவுகணைகளைத் தயாரிக்க 2 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்பதால், புதிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் துல்லியமான வழிகாட்டுதல் குண்டுகள் (Precision-Guided Munitions – Joint Direct Attack Munitions (JDAMs) போன்ற நவீன ஆயுதங்கள் தொடர் பயன்பாட்டால் குறைய வாய்ப்புள்ளது. நீண்ட தூர ஏவுகணைகளுக்கும் (Long-Range Missiles) தேவையான அளவு இல்லை என்று கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடுத்தர மற்றும் மேல்-நடுத்தர ரக ஆயுதங்கள் போதுமானதாக இருந்தாலும், அதிநவீன ஆயுதங்கள் (highest-end weapons) தங்களுக்குத் தேவையான அளவுக்கு இல்லை என்று ஏமாற்றத்துடன் கூறியுள்ளார்.
வளைகுடாவில் போரின் தீவிரம் குறையாவிட்டால், அமெரிக்காவின் ராணுவத் தொழிற்துறை கையிருப்பை வேகமாக நிரப்ப முடியாமல் போகலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் பொருளாதார மற்றும் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் எதிர்பாராத பதிலடியால் அமெரிக்கா முன்னெடுத்துள்ள போருக்கு போதுமான ஆயுதங்களை வழங்க முடியாமல் பென்டகன் அதிகாரிகள் திணறுவதாக ஏற்கனவே தகவல் கசிந்துள்ளது. அமெரிக்கா ஈரான் முழுவதும் ஆயிரக்கணக்கான இலக்குகளைத் தாக்கியுள்ளது, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து, அயத்துல்லா அலி கொமேனி உட்பட நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் பெரும்பாலோரைக் கொன்றுள்ளது. ஆனால் ஒப்ரேஷன் எபிக் ப்யூரி ஏற்கனவே அமெரிக்காவின் ஏவுகணை இருப்பை பாரியளவில் குறைத்து விட்டது என்றே தகவல் கசிந்துள்ளது.
ஏவுகணை உற்பத்தி அதிகரிப்பு:
வளைகுடா நாடுகளுக்கும் உக்ரைனுக்கும் பல முனைகளில் தங்களைத் தற்காத்துக் கொள்ள போதுமான ஏவுகணைகள் அமெரிக்காவிடம் இல்லை என ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு ஆணையாளர் எச்சரித்துள்ளார். இதனிடையே, அமெரிக்காவால் ஒரு போரை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க முடியும் என்ற உறுதிமொழிகளை டிரம்ப் அளித்த போதிலும், நிலைமையை அவர் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிகிறது.
கடந்த வார இறுதியில் Lockheed Martin , Northrop Grumman Corporation , RTX , Honeywell and L3Harris Technologies ஆகிய பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளை வெள்ளை மாளிகைக்கு அழைத்து இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் டிரம்ப் விவாதித்துள்ளார். அவர்கள் ஏவுகணை உற்பத்தியை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை நான்கு மடங்காக அதிகரிக்க ஒப்புக்கொண்டதாகவே டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரான் போருக்கான ஆயுதங்களை வாங்க காங்கிரஸில் கூடுதல் நிதியைக் கோருவதையும் டிரம்ப் பரிசீலிக்க இருக்கிறார். $50 பில்லியன் டொலர் நிதியதுக்கீடு கிடைத்தால் உற்பத்தி உடனடியாகத் தொடங்கலாம் என்றும் அந்த நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு:
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளதால் வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் விரைவாகக் குறைந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ள.
அமெரிக்காவிடம் வரம்பற்ற ஆயுத இருப்பு உள்ளதாகவும், ஈரானை வீழ்த்த போதுமான ஆயுதங்கள் இருப்பதாகவும் முன்னர் டிரம்ப் கூறியிருந்தார். பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்செத், எங்களிடம் ஆயுதப் பற்றாக்குறை இல்லை; ஈரான் எங்களைவிட அதிக காலம் நீடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 12 நாட்கள் நடந்த போரில் 500க்கும் உற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்தியது. ஆனால் ஈரான் இம்முறை பாரிய அளவுக்கு எதிர் தாக்குதல் நடத்துகிறது. நூற்றுக்கணக்கான ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் பெரிய அளவிலான பாதுகாப்பை அமைத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு அருகில் அமைந்துள்ள வளைகுடா நாடுகளில் மட்டுமே பல இலக்குகளை ஈரானின்ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்க முடிந்ததாக கூறப்படுகிறது. ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் உள்கட்டமைப்புகள் விமானத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய ராணுவத் தலைமையகங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன என அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பதிலடி திறன்:
இம்முறை போர் தொடங்கியதும் ஈரானின் பதிலடி கொடுக்கும் திறனைக் கட்டுப்படுத்துவதையே முதல் நோக்கமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் வைத்திருந்தன இந்நிலையில், கடுமையான மற்றும் துல்லியமான தாக்குதல்கள் இன்னும் சில நாட்களுக்குத் தடையின்றி தொடரும் என்றும், மத்திய கிழக்கு முழுவதும், உலகம் முழுவதும் அமைதி என்ற இலக்கை அடையும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குறைந்த அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பேட்ரியாட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியே ஈரானின் தாக்குதல்களை நடுவானிலேயே இடைமறித்து அமெரிக்கா அழித்து வருகிறது.
அதே நேரத்தில் பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் துல்லியமாக அழிக்கும் திறனுடைய ஸ்டாண்டர்ட் SM-3 ஏவுகணைகளையும் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. அத்துடன் டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளையும் ஏவி ஈரானின் முக்கிய இலக்குகளை அமெரிக்கா அழித்துள்ளது. இந்தச் சூழலில் கூடுதல் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு இடைமறிப்பான்களை மத்திய கிழக்கு பகுதிக்கு தொடர்ந்து அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே ஆபரேஷன் ரஃப் ரைடர் என்ற பெயரில் ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளுக்கு எதிராகவும் நைஜீரியாவில் கிறிஸ்துவர்களை இனப் படுகொலை செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைப் போலவே ஈரான் மீதான Operation Epic Fury என்ற போர் நடவடிக்கையிலும் புதிய ராணுவ யுக்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரானின் துறைமுகங்கள் அழிக்கப்பட்ட நிலையில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் டிரம்ப் இன்னும் சில வாரங்களுக்குப் போர் நீடிக்கும் என்று அறிவித்துள்ளார். இந்த சூழலில் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போர் நிறுத்தம் ஏற்பட்டால், இஸ்ரேலுக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்படும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, ஹமாஸ், ஈரான், ஹிஸ்புல்லா, ஹவுதி என தொடர்ந்து போர்க்களத்திலேயே இருக்கும் இஸ்ரேலுக்கு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த போர்களுக்கு எல்லாம் காரணம் ஈரான் என இஸ்ரேலிய அரசு கூறுகிறது. இதனாலேயே அங்கு ஆட்சியை மாற்றி, மேற்குலக – அமெரிக்க சார்பு அரசை கொண்டுவர டெல்அவிவ் முயற்சி செய்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *