முச்சந்தி

ஈரானிய போர்க் கப்பலில் திடீர் இயந்திரக் கோளாறு!;  கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரம்

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள ஈரானியக் கப்பலானஐஆர்ஐஎஸ் புஷேர் , இயந்திரக் கோளாறு காரணமாக திருகோணமலை துறைமுகத்திற்கு பயணிக்க முடியாமல் நேற்று முன்தினம் சனிக்கிழமையும் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியேயுள்ள நங்கூரமிடப்பட்ட பகுதியில் நிலைகொண்டிருந்தது.

தொடர்புடைய அதிகாரிகள், தூதரகங்கள் மற்றும் கப்பலின் மாலுமியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை அடுத்து, ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பலையும் அதன் பணியாளர்களையும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வியாழக்கிழமை அறிவித்தார்.

மார்ச் 4 அல்லது 5 ஆம் திகதிகளில் இலங்கைத் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு மார்ச் 4 ஆம் திகதி புதன்கிழமை இக்கப்பல் அனுமதி கோரியது. அதன்படி, மார்ச் 5 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் வெளி நங்கூரப் பகுதிக்கு இது வந்தது.

கப்பலில் இருந்த 208 பணியாளர்கள் (53 அதிகாரிகள், 84 கெடட் மாணவர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 21 மாலுமிகள்) கரைக்கு அழைத்து வரப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். இவர்கள் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கப்பல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட வேண்டியிருந்தது. எனினும், இழுவைப்படகின் (Towing) உதவியின்றி கப்பலை நகர்த்த முடியாது என அதன் பணியாளர்கள் தெரிவித்துள்ளதால், அது கொழும்பு துறைமுகத்திலேயே தங்கியுள்ளது. தற்போது கப்பலில் 12 முதல் 14 பணியாளர்கள் வரை இருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு வெளியுறவு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அனுமதி அவசியமாகும். இருப்பினும், இக்கப்பல் ஆரம்பத்திலிருந்தே கடற்படையின் கண்காணிப்பின் கீழ் இருந்ததால், கப்பல் வந்திறங்கிய அன்று இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. கப்பலில் இருந்தவர்களை வெளியேற்றுவதற்கு இரண்டு இழுவைப்படகுகளை வழங்கியமை மட்டுமே துறைமுக அதிகார சபையின் பங்களிப்பாக இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *