முச்சந்தி
ஈரான் தரைவழி தாக்குதலில் குர்திஷ் படை!… அமெரிக்காவால் மீண்டும் குர்துக்கள் பலிக்கடா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈரானின் அணுசக்தி கனவை நசுக்கி, அமெரிக்காவிற்கு தரைவழியாக படை நகர்த்த குர்திஷ் வீரர்கள் முன்னேறி வருகிறார்கள் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பலிக்கடாவாக குர்திஷ் :
ஈரானில் சுதந்திரம் வேண்டி, துணிச்சலாக தரை நடவடிக்கையில், ஆயிரக்கணக்கான குர்திஷ் (Kurdish) பெஷ்மெர்கா போராளிகள் ஈராக்கிலிருந்து வடமேற்கு ஈரானுக்கு எல்லையைத் தாண்டி நுழைந்துள்ளனர். ISIS இஸ்லாமிய அரசுடன் போராடி கலிபா கனவுகளை நொறுக்கி, உலகை திரும்பிப் பார்க்க வைத்த அச்சமற்ற குரதிஷ் வீரர்கள் இவர்கள்தான். இப்போது அவர்கள் ஈரானின் படை பிரிவுகளை முறியடித்து, மூலோபாய நிலத்தைக் கைப்பற்றி முன்னேறி இருக்கிறார்கள் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானின் பாலிஸ்டிக் ஏவுகணை சாம்ராஜ்யம் மற்றும் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக ஒரு பெரிய போரை நடாத்தும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் உண்மையான உதவியை குர்திஷ் படைகள் வழங்குவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க உளவுத்துறை மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் மூலம் பாதுகாப்பு வழியை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், குர்திஷ் படைகள் தரையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானின் ஒடுக்கப்பட்ட மில்லியன் கணக்கான குர்திஷ் மக்கள் இறுதியாக தங்கள் சொந்த நாட்டின் தலைவிதியை மாற்ற முயற்சிக்கின்றனர் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். குர்திஷ்தானின் குர்திஷ் சிங்கங்களுக்கு நன்றி. நீங்கள் உங்கள் சொந்த மக்களை மட்டும் பாதுகாக்கவில்லை, ஒரு கொடூர ஆட்சியை, பேரழிவு அச்சுறுத்தல்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறார்கள் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தரை தாக்குதலில குர்திஷ் படை:
ஈரானில் அமெரிக்க படைகள் தரை தாக்குதலை உடனடியாக செய்ய தயாராக இல்லாத நிலையில் , குர்திஷ் படையினர் தரை தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு குர்திஷ் படைகளை முன்னணியில் களமிறக்கி அமெரிக்காவுக்காக போர் செய்வது இரண்டாவது தடவையாகும்.
சிரியாவில் இஸ்லாமிய அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்ட குர்திஷ் படைகளை அமெரிக்க அண்மையில் கைவிட்டு சென்றது. தற்போது ஈரானில் தரை தாக்குதலுக்கு குர்திஷ் படையினரை பயன்படுத்தி, மீண்டும் பலிக்கடாவாக்க அமெரிக்க திட்டமிட்டுள்ளது.
நாடற்ற குர்திஷ் மக்கள்:
மத்திய கிழக்கில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமான குர்திஷ் மக்கள் தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வட ஈராக், வடமேற்கு ஈரான், தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர். ஆயினும் தாயகம் இல்லாத மிகப்பெரிய இனக்குழுவான குர்திஷ் மக்கள் துருக்கியிலும், சிரியாவிலும் பிற இடங்களிலும் நீண்டகாலமாக துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
ஐந்து நாடுகளில் சிதறி வாழும் குர்திஷ் மக்களின், பேரிடியாக ஐந்து நாடுகளிலுமே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட இனமாக கருதப்படுகின்றனர். இதன் விளைவாக விடுதலை போராட்டத்திற்கும் தள்ளப்பட்டார்கள்.ஈரானுக்கு எதிராக தரை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கவால் பயன்படுத்தப்படும்
குர்திஷ் இனத்தினரின் தனி நாட்டினை உருவாக்கும் முயற்சியை அமெரிக்கா தனது தேவைக்காக பயன்படுத்துவதுடன், குர்திஷ் இயக்கங்களுக்கு ஆயுத பயிற்சி, நிதி வழங்குதல் போன்றவற்றினை சிஐஏ மேற்கொண்டு வருவதனால் அமெரிக்காவின் கொத்தடிமைகளாக தொடர்ந்து உள்ளனர்.
2003 ஈராக்கில் சதாம் ஹுசைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொண்டபோது, குர்திஷ் போராளிகள் அமெரிக்காவுக்கு வழங்கிய பங்களிப்பு பிரதானமானது.
அதுபோல் 2011 லிருந்து சிரியாவில் பசர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் குர்திஷ் போராளிகள் அமெரிக்காவினால் களம் இறக்கப்பட்டனர்.
அதன் பின்னர் 2014 க்கு பின்பு சிரியாவில் இஸ்லாமிய அரச இயக்கத்துக்கு எதிராக குர்திஷ் இயக்கத்தினர் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டனர். ஆனாலும் இதுவரையில் அமெரிக்காவினால் குர்திஷ்களுக்கான தனி நாட்டினை அமைத்துக்கொடுக்க முடியவில்லை.
தற்போது ஈரானுக்கு எதிராக அமெரிக்கா – இஸ்ரேல் ஆரம்பித்துள்ள போரில் இவ்விரு நாடுகளும் எதிர்பார்த்த இலக்கினை இதுவரை அடைய முடியவில்லை. ஈரானிடமிருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பாராத இழப்புக்களை எதிர்கொண்ட நிலையில், குர்திஷ் போராளிகள் மூலமாக ஈரானுக்குள் தரைவழித் தாக்குதலை ஆரம்பிக்கும் முயற்சியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இறங்கியுள்ளது.

இதற்காக ஈரானிய குர்திஷ்தான் ஜனநாயக கட்சி முஸ்தபா ஹிஜ்ரியுடனும் மற்றும் ஈராக்கில் உள்ள குர்திஷ் இயக்க தலைவர்களுடனும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குர்திஷ் இயக்கங்களுக்குள் இஸ்ரேலின் மொசாட்டும் ஆழ ஊடுருவியுள்ளதுடன், பெருமளவான ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தரைவழி தாக்குதல் முயற்சியை முறியடிக்கும் பொருட்டு ஈரான் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக ஈரானின் ஏராளமான படைகளை ஈரானின் வட மேற்கு எல்லையில் குவித்துள்ளதுடன், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள குர்திஷ் இயக்கங்களின் நிலைகள் மீது ஈரான், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.
துருக்கியில் ஆயுத போராட்ட முடிவு:
நாற்பது ஆண்டுகால தனிநாட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் போராளிகள் துருக்கியில், தங்களது ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒரு வரலாற்று முடிவை 2025இல் அறிவித்தனர்.
நீண்ட காலமாக தங்கள் இன அடையாளத்தைத் தக்கவைக்க குர்திஷ் மக்கள் போராடினர். ஆனால் அவர்களை எல்லை தாண்டியும் அழித்தொழிக்கத் துடித்தது துருக்கி. தனிநாடு கோரி போராடும் குர்திஷ் போராளிகள் அமைப்பான பி.கே.கே-க்கும் துருக்கிக்கும் இடையிலான மோதல் 1984 இல் தொடங்கியது. இந்த மோதல் பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தது.
துருக்கியில் நாற்பது ஆண்டுகால தனிநாட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் போராளிகள் தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். நான்கு தசாப்த கால ஆயுத மோதலுக்குப் பிறகு, துருக்கியுடனான புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, குர்திஷ் போராளிக் குழுவான ‘குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி’ ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது.
ஈரானுக்குள் உள்நாட்டுப் போர்?
தற்போது இந்த நாடற்ற குர்திஷ் மக்களை பயன்படுத்தி ஈரானுக்குள் உள்நாட்டுப் போர் வெடிக்கப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெஹ்ரானுடன் உள்நாட்டுப் போருக்காக குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்க உளவுத்துறை இரகசியத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்கனவே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய அரசாங்கத்தை உள்ளிருந்தே பலவீனப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா உள்நாட்டுப் போரை அங்கு தூண்டத் திட்டமிட்டுள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ , ஈராக்கில் இயங்கும் குர்திஷ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி, ஈரானுக்குள் ஒரு பாரிய கிளர்ச்சியை உருவாக்க வியூகம் வகுத்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
ஈரானிய எல்லையில் குவியும் குர்திஷ் படைகள், அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு அமைவாக, குர்திஷ்தான் சுதந்திரக் கட்சியின் ஆயுததாரிகள் ஈரானின் எல்லைப் பகுதியான சுலைமானியா மாகாணத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய அந்த அமைப்பின் முக்கிய அதிகாரி கலீல் நாதிரி , தமது படைகள் ஈரானுக்குள் ஊடுருவத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரானிய-குர்திஷ் கிளர்ச்சிக் குழுவான ‘கோமலா’ அமைப்பும், கள நிலைமைகள் சாதகமாக மாறும் பட்சத்தில் விழைவில் ஈரானிய எல்லையைக் கடந்து தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது.
டிரம்ப் மற்றும் ஜலால் தலாபானி இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தையில், இந்தக் கிளர்ச்சிக்கான ஆயத்தங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈராக்கின் குர்திஷ் அரசியல் கட்சியான தலைவர் பாஃபெல் தலாபானி ஆகியோருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் குர்திஷ் குழுக்களை முழுமையாக அணிதிரட்டுவதே பிரதான நோக்கம் என்றும், அமெரிக்காவின் இலக்குகளைப் புரிந்துகொள்வதற்கும், வலுவான கூட்டணியை அமைப்பதற்கும் டிரம்ப் தயாராக இருப்பதாக
கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தனித்து நிற்கும் ஈரான்:
ஈராக்கிய எல்லைகளில் குர்திஷ் போராளிகளின் நகர்வுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து ஈரான் கடும் பதற்றமடைந்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குர்திஷ் தலைவர் தலாபானியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, எல்லையில் இடம்பெறும் “பயங்கரவாத நகர்வுகள்” குறித்துக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆயினும், ஈரானின் செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ , குர்திஷ் போராளிகள் ஈரானுக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியாகும் செய்திகளை முற்றாக மறுத்துள்ளது. ஈலாம், கெர்மன்ஷா மற்றும் மேற்கு அசர்பைஜான் ஆகிய எல்லைப் பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும், இது அமெரிக்க ஊடகங்களின் உளவியல் ரீதியான பொய்ப்பிரச்சாரம் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய-குர்திஷ் கட்சிகளின் கூட்டணியும் தாம் தரைவழித் தாக்குதல்களை இன்னும் ஆரம்பிக்கவில்லை எனத் தந்திரோபாயமாகக் குறிப்பிட்டுள்ளது.
ஈரானில் வான்வெளித் தாக்குதல்களை விட, உள்நாட்டில் சிறுபான்மையினரான குர்திஷ் மக்களைப் பயன்படுத்தி அமெரிக்கா முன்னெடுக்கும் இந்த தரைவழி ‘உள்நாட்டுப் போர்’ வியூகம், ஈரானிய அரசாங்கத்திற்கு ஒரு மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்பதே சர்வதேச அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
![]()