கவிதைகள்
எண்ணுவார் விளங்குவார் ஈடேற்றம் எய்துவார்!… கவிதை… ஜெயராமசர்மா

பணிவும் வேண்டும் துணிவும் வேண்டும்
பகையை வளர்க்கா திருக்க வேண்டும்
ஒழிவு மறைவு இல்லா திருக்க
ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும்
எப்ப பிறப்போம் என்பதும் அறியோம்
எப்ப இறப்போம் என்பதும் அறியோம்
இதற்கு இடையில் பகையை வளர்ப்பதா
கிடைக்கும் நாளைப் பயனுடை யாக்குவோம்
அறிவைத் தேடுவோம் தெளிவைப் பெறுவோம்
ஆக்கம் நினைத்து அனைத்தும் செய்வோம்
அறத்தை அணைப்போம் அன்பைத் தொடுவோம்
அமைதி என்பதை அகத்தி லிருத்துவோம்
ஆசை இல்லா மனதரே இல்லை
அழிவைக் கொடுக்கும் ஆசையை விடுவோம்
அன்பை பண்பை அடக்கத்தை ஒழுக்கத்தை
அகத்தில் அமர்த்திட ஆசை கொள்வோம்
ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசேனோ டாயினும் ஆசை அறுமின்
என்னும் வார்த்தை இமயாம் தத்துவம்
எண்ணுவார் விளங்குவார் ஈடேற்ற மெய்துவார்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()