முச்சந்தி
உலகின் மிகப்பெரிய போர் கப்பல்: ஆபிரகாம் லிங்கன் கப்பலை ஈரான் தாக்கியதா?… பேர்ல் ஹார்பரை தாக்கிய ஜப்பான் !!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

தொடக்கூடாத இடத்தை தொட்டு விட்டதா ஈரான், ஜப்பான் செய்த அதே தவறை மீண்டும் ஈரான் செய்து விட்டதா என்று தெரியவில்லை. ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘USS ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) மீது நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக ஈரான் ராணுவம் (IRGC) அறிவித்துள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கை, நிலைமையை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இதுவரை நிழல் யுத்தம் (Proxy War) நடத்தி வந்த ஈரான், இப்போது அமெரிக்காவுடன் நேரடியாக மோதுகிறது. இந்த நேரடி மோதல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால் அமெரிக்காவோ அந்த ஏவுகணைகள் கப்பலுக்கு அருகில் கூட வரவில்லை, என மறுத்தாலும் ஈரான் தொடுத்திருக்கும் இந்த ‘நேரடி மோதல்’ ஒரு பயங்கரமான வரலாற்று நிகழ்வை பக்கத்தை நினைவுபடுத்துகிறது.அதுவே பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) தாக்குதலாகும். பேர்ல் ஹார்பரில் அன்று ஜப்பான் தாக்கியது போல இன்று ஈரானால் அமெரிக்க பாரிய கப்பல் தாக்கப்பட்டுள்ளது.
பேர்ல் ஹார்பரை தாக்கிய ஜப்பான்:
1941இல் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் தளத்தின் மீது ஜப்பான் ஒரு திடீர் தாக்குதலை நடத்தியது. இரண்டாம் உலகப்போரில் அன்றுவரை அமைதியாக இருந்த அமெரிக்கா, அந்த ஒரே ஒரு தாக்குதலால் ஆக்ரோஷமடைந்து இரண்டாம் உலகப்போரில் குதித்தது. அதன் விளைவு என்னவென்று ஜப்பானுக்குத் தெரியும். ஹிரோஷிமா, நாகசாகியை அணு ஆயுதங்கள் மூலம் தாக்கியதை உலகம் மறக்காது.
1945-இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா நடத்திய அணு ஆயுதத் தாக்குதல், ஜப்பானை நிலைகுலையச் செய்த ஒரு வரலாற்றுப் பேரழிவாகும். சில நிமிடங்களில் இரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். நகரங்கள் அனைத்தும் சாம்பலாகிப் போயின.
அணுகுண்டு வீச்சின் கொடூரம் அதோடு முடியவில்லை. கதிர்வீச்சின் தாக்கம் (Radiation) காரணமாக, தப்பிப்பிழைத்தவர்களும் புற்றுநோய் மற்றும் கொடூரமான நோய்களால் பல தசாப்தங்களாக அவதிப்பட்டனர்.
பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட ஊனங்கள் ஏற்பட்டன. ஜப்பானின் பொருளாதாரம் மற்றும் ராணுவ பலம் முற்றிலுமாக சிதைந்தது. இதனால் இரண்டாம் உலகப்போரில் அந்த நாடு சரணடைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இன்றும் அந்தத் தழும்புகள் ஜப்பானியர்களின் மனதில் நீங்காத வடுக்களாக உள்ளன.
அதே தவறை ஈரான் செய்ததா ?
இன்று அதே போன்ற ஒரு தவறை ஈரான் செய்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஒரு விமானம்
தாங்கிக் கப்பல் என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை மிதக்கும் ஒரு தீவு. அதன் மீது தாக்குதல் நடத்துவது என்பது நேரடியாக அமெரிக்காவின் இறையாண்மை மீது கை வைப்பதற்குச் சமம் என்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் கௌரவம் மீதான அடியாகும்.
தாங்கிக் கப்பல் என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை மிதக்கும் ஒரு தீவு. அதன் மீது தாக்குதல் நடத்துவது என்பது நேரடியாக அமெரிக்காவின் இறையாண்மை மீது கை வைப்பதற்குச் சமம் என்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் கௌரவம் மீதான அடியாகும்.அமெரிக்காவின் ‘Operation Epic Fury’ ஏற்கனவே ஈரானைத் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், லிங்கன் கப்பலைத் தாக்க முற்பட்டதன் மூலம் ஈரான் தனது அழிவுக்குத் தானே சுழி போட்டுள்ளது. அதுவே ஈரானின் தப்புக்கணக்கா என்று பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.
ஈரான் ஒருவேளை தற்காப்புக்காக தனது அணுசக்தி ரகசியங்களைப் பயன்படுத்த முயன்றால், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை (Tactical Nukes) ஏவத் தயங்காது. அணு ஆயுத மிரட்டலை ஈரான் தொடர்ந்து செய்தால் பாரிய அழிவே மிச்சமாகும்.
ஆனால் உலகப்போர், அணு ஆயுத போர் என்ற வாதங்கள் எழுமாயின், உலக நாடுகளின் அணிவகுப்பு இரு முனையாக மாறிவிடும். ஒருபுறம் அமெரிக்கா-இஸ்ரேல், மறுபுறம் ரஷ்யா-சீனா-ஈரான் என உலகம் இரண்டு பிளவுகளாகப் பிரியத் தொடங்கும். ஆனால் அது மூன்றாம் உலகப்போரின் அணு ஆயுத அத்தியாயமாக மாறும் என்று கூறமுடியாது.
ஏனெனில் ஈரான் தனது உள்நாட்டு மக்களின் கோபத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால், அமெரிக்கா இதைப் போருக்கான ஒரு காரணமாக எடுத்துக்கொண்டால், ஈரானின் பொருளாதார நிலைமை மேலும் சிதைக்கப்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஏற்கனவே வெனிசுலா அதிபரை கடத்த கைது செய்து சிறையில் அடைத்து டிரம்ப், இப்போது ஈரானின் மையப்பகுதியையே சிதைத்து வருகிறார். ஆபிரகாம் லிங்கன் மீதான தாக்குதல் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையாகத் தான் இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய போர் கப்பல்:
அமெரிக்காவின் விமானம் தாங்கி ஏபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் (USS Abraham Lincoln) மீது, ஈரானின் புரட்சிகரக் காவல்படை நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்கியிருப்பதாக, ஈரான் அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த கப்பல் உலகின் மிகப்பெரிய போர் கப்பல்களில் ஒன்றாகும். இது பாரிஸ் ஈபுள் கோபுர உயரத்தை விட நீளமானது இந்த கப்பலின் நீளம் சுமார் 333 மீட்டர். கப்பல் உயர் கோபுரத்தின் உயரம் சுமார் 324 மீட்டர் ஆகும். அத்துடன் இந்த கப்பல் அணுசக்தியால் இயங்குகிறது. இதில் இரண்டு அணு உலைகள் உள்ளன. இதனால் இது நீண்ட தூரம் எரிபொருள் நிரப்பாமல் பயணம் செய்ய முடியும்.கப்பலில் உள்ள விமான ஓடுதளங்கள் (runway) மூலம் போர் விமானங்கள் கடலில் இருந்தபடியே புறப்படவும் தரையிறங்கவும் முடியும்.கப்பலில் இருக்கும் விமானங்களில் F-35 Lightning II போன்ற, ரேடாரில் எளிதில் கண்டறிய முடியாத stealth தொழில்நுட்பம் கொண்ட போர் விமானங்களும் அடங்கும். இந்த விமானம் தாங்கி கப்பல் பொதுவாக ஒரு பெரிய கடற்படை குழுவுடன் இயங்குகிறது. அதனை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் தொடர்ந்து செல்கிறது.
இந்த குழுவில் நிலத் தளங்களில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய Tomahawk போன்ற நீண்ட தூர ஏவுகணைகளும் இருக்கும். இத்தகைய விமானம் தாங்கி கப்பல்கள் கடலில் மிதக்கும் ராணுவத் தளங்களாக செயல்பட்டு, அமெரிக்காவின் உலகளாவிய ராணுவப் பிரசன்னத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மத்திய கிழக்கில் தொடரும் போர்:
அமெரிக்கத் தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் சரமாரித் தாக்குதல் நடத்தி வருகிறது.

அயத்துல்லா அலி கொமெனி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பல முனைகளில் போர் வெடித்துள்ளது. ஈரானின் புரட்சிகரக் காவல்படை, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய தரப்புகளுக்கு இடையே நடந்து வரும் நேரடி மோதல்களால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
கொமெனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், ஈரானின் உக்கிரமான பதிலடி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஈரான் தனது அதிரடித் தாக்குதல்களைத் தொடங்கியதால் பஹ்ரைனில் உள்ள ‘ஷேக் ஈசா’ (Sheikh Isa) அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது 20 ஆளில்லா விமானங்கள் (Drones) மற்றும் ஏவுகணைகளை வீசி ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்கத் தளத்தின் முக்கியக் கட்டளை மையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.
குறிவைக்கப்பட்ட அமெரிக்கத் தூதரகங்கள்:
வளைகுடா நாடுகள் முழுவதும் உள்ள அமெரிக்க இலக்குகள் கடுமையான தாக்குலுக்கு உள்ளாகியுள்ளன. சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அமெரிக்கக் குடிமக்களுக்கான சேவைகள் ரத்து செய்யப்பட்டுத் தூதரகம் உடனடியாக மூடப்பட்டது.
குவைத் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவது காணப்பட்ட நிலையில், மறுஅறிவிப்பு வரும் வரை அந்தத் தூதரகமும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றன:
இதேவேளை அமெரிக்காவின் பதிலடி தாக்குதலில் பல ஈரான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானுக்குள் ஊடுருவி, அங்குள்ள புரட்சிகரக் காவல்படையின் கட்டளை மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தரைமட்டமாக்கி விட்டதாக அமெரிக்க ராணுவம் (Centcom) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இஸ்ரேலின் இருமுனைத் தாக்குதலில் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் ஆகிய இரண்டு நகரங்கள் மீதும் ஒரே நேரத்தில் வான்வெளித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. பெய்ரூட் நகரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள பதற்றமான காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும் 3 ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது.
ஆயுதப் பற்றாக்குறையில் அமெரிக்கா:
ஒருபுறம் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் இது புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போரை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் போதிய நவீன ஆயுதங்கள் கையிருப்பில் இல்லை என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஆயுதங்களை நன்கொடையாக அள்ளிக் கொடுத்ததே இந்த நிலைக்குக் காரணம் என அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் அல்-கார்ஜ் நகரங்களை நோக்கிப் பறந்து வந்த எட்டு ஆளில்லா விமானங்களைச் சவுதி ராணுவம் நடுவானிலேயே இடைமறித்து அழித்துள்ளது.
![]()