முச்சந்தி

மொசாட்டின் துல்லியமான உளவு தாக்குதல்…  இஸ்ரேல் அதிரடியால் வீழ்ந்த ஈரான் தலைமை!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

( இன்றைய பேசுபொருளாக உலகளவில் இருப்பது, கொமேனியின் கோட்டைக்குள் புகுந்து மொசாட் போட்ட திட்டம் எப்படி வெற்றி பெற்றது என்பதே. ஈரானின் இராணுவ வளாகங்கள் மற்றும் அணுசக்தி மையங்களுக்குள் அமைதியாக நுழைந்து தகவல்களை மொசாட் சேகரித்து வந்தது. இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் வைத்த பெயர் ‘உறுமும் சிங்கம்’ என்பதாகும். இந்த நுண்ணிய நடவடிக்கைக்கு மொசாட் உளவு அமைப்பு கையாண்ட வழிமுறைகள் குறித்து விரிவான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை)
கொமேனியின் மறைவை ஈரான் அரசு தொடக்கத்தில் மறைக்க முயன்றாலும், மொசாட் வெளியிட்ட செய்மதி (Compound Satellite) படங்கள் கள உண்மையை அப்படியே வெளிப்படுத்தின. இதை தொடர்ந்தே ஈரான் அரசு கொமேனி மறைவை உறுதி செய்தது.
மொசாட் உளவு அமைப்பின் நுண்ணிய துல்லியமான தாக்குதலால் கொமேனியின் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்வேலை மூலமே குண்டு வீசி அவரை குடும்பத்துடன் அழித்துள்ளது. உலக வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளி போன்ற நாடுதான் இஸ்ரேல். ஆனால், அதன் உளவு அமைப்பான மொசாட் (Mossad) நினைத்தால், உலகின் எந்த மூலையிலும் இருக்கும் எதிரியை அழிக்க முடியும் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சியாக ஈரானின் உச்ச தலைவர் கொமேனி மீதான தாக்குதல் அமைந்துள்ளது.
கொமேனி தங்கியிருந்த பாதுகாப்பு பிரதேசம் என்பது சாதாரண இடமல்ல. அது ஒரு இரும்புக்கோட்டை. அந்தப் பாதுகாப்பு வளையத்தை மொசாட் எப்படி உடைத்தது என்பது பற்றி இப்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே, ஈரானின் இராணுவ வளாகங்கள் மற்றும் அணுசக்தி மையங்களுக்குள் அமைதியாக நுழைந்து தகவல்களை மொசாட் சேகரித்து வந்தது. இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் வைத்த பெயர் உறுமும் சிங்கம் ( ரோரிங் லயன் Roaring Lion) என்பதாகும். இந்த நுண்ணிய நடவடிக்கைக்கு (Micro Achievement) மொசாட் உளவு அமைப்பு கையாண்ட வழிமுறைகள் குறித்து விரிவான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
ஆயினும் உள்ளிருந்து வேலை செய்த உளவாளிகள் ஈரான் ராணுவத்தின் (IRGC) மிக உயர்மட்டத்திலிருந்தே சிலரைத் தனது பக்கம் மொசாட் கைவசப்படுத்தியது. கொமேனி எப்போது பாதுகாப்பு சுரங்கப் பாதைக்குச் செல்வார், அவரது குடும்பத்தினர் எப்போது அங்கு வருவார்கள் என்ற துல்லியமான நேரத்தைக் கொடுத்ததே இந்த உள்ளூர் உளவாளிகள் தான் என்கிறார்கள்.
அத்துடன் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Air Defense Systems) ஒரே நேரத்தில் செயலிழக்கச் செய்தது மொசாட்டின் ‘சைபர்’ பிரிவு. இதனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் விமானங்கள் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல் ஈரான் ராணுவம் எதிர் தாக்குதலை செய்ய முடியாமல் போயுள்ளது என்று கூறப்படுகிறது.
இதேவேளை டெஹ்ரானில் தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே, மொசாட் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் ஈரானிய மக்களுக்கு ஒரு செய்தி அனுப்பியது. நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம், அரசுக்கு எதிராகப் புரட்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தியது. உடனடியாக இது ஈரானிய உளவுத் துறையைக் குழப்பத்தில் ஆழ்த்தியது என்பதும் உண்மையே.
துல்லியமான ஏவுகணை தாக்குதல்:
சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி கொமேனியின் இல்லத்தின் ஜன்னல் வழியாகப் பாய்ந்து செல்லும் அளவுக்குத் துல்லியமான ஏவுகணைகளை மொசாட் வழிகாட்டுதலின்படி இஸ்ரேல் ஏவியது. குறிப்பாக, கதிரியக்கக் கழிவுகளை அழிக்கும் திறன்கொண்ட மேக்னடிக் குண்டு இரகசியங்களையும் மொசாட் ஏற்கனவே சோதித்திருந்தது.
இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய உளவுப் பிரிவான மொசாட்டில் ‘கிடோன்’ (Kidon) என்றொரு தனிப் பிரிவு உண்டு. இதன் பொருள் ‘ஈட்டி’ (Bayonet) எனப்படும். இந்தப் பிரிவைச் சேர்ந்த உளவாளிகள் தான் கொமேனியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தெஹ்ரான் நகர வீதிகளில் மாறுவேடத்தில் சுற்றியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஈரான் அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதேவை, செயற்கைக்கோள் மூலம் இயக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கியால் மொசாட் 2020ம் ஆண்டில் தீர்த்துக்கட்டியது நினைவிருக்கலாம். அதே போன்ற ஒரு அதிநவீனத் தொழில் நுட்பத்தைத்தான் இப்போதும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஈரான் ஆட்சி கட்டமைப்பை சிதைத்தல்:
தெஹ்ரானில் நடந்த தாக்குதல் ஈரான் நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பை சிதைக்கும் முயற்சி என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள இராணுவ மற்றும் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து முன்கூட்டியே தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாதுகாப்பு அமைச்சக வளாகங்கள், அணுசக்தி ஆராய்ச்சி மற்றும் செறிவூட்டல் நிலையங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன என்று மேற்குலக வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கியப் போர் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்தி, அமெரிக்காவின் வெளிப்படையான இலக்குகளாக ஈரானின் ஏவுகணை உற்பத்தித் திறனைச் சிதைத்தல், கடற்படை இயக்கங்களை முடக்குதல்,
புரட்சிகர காவல் படையின் வலையமைப்பைத் தகர்த்தல், அணு ஆயுத மேம்பாட்டைத் தடுத்தல் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மறைமுக இலக்குகள் வேறாக இருக்கலாம். ஈரான் அரச அதிகார மையத்தின் கட்டளைத் தொடரைத் துண்டித்து ஆட்சிக் கட்டமைப்பை அழுத்தத்தில் தள்ளுவது என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் உளவு பலவீனம்:
மொசாட் உளவுத்துறையின் மிகவும் நவீனமான கண்காணிப்பு அமைப்பை ஈரான் அரசால் தடுக்க இயலவில்லை. நேரடியாக உளவாளிகள் அளித்த தகவலாக இருக்கலாம். ஈரானிய தனிநபர்கள் குறித்து தொழில்நுட்ப முறையில் கண்காணித்ததன் மூலம் கிடைத்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைத்தது. அப்போது, தனிநபர்களின் நகர்வுகளை அறிய அவர்களின் தொலைத்தொடர்பு மற்றும் மொபைல்போன் சாதனங்களை ஊடுருவியதாக கூறப்படுகிறது.
சில சமயங்களில் முக்கிய அதிகாரிகளுடைய மெய்க்காப்பாளர்களின் நகர்வுகளை கண்காணிப்பதும் அடங்கும். நீண்ட காலமாக இவ்வாறு தகவல்களைச் சேகரிக்கும் போது, வழக்கமான நடத்தை மற்றும் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். இதன்மூலம், அவர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணிக்கவும், பலவீனமான தருணங்களை கண்டறியவும் முடியும்.
ஈரான் தனது எதிரிகள் அதிஉயர் தலைவரைப் பின்தொடர்வதை அறிந்திருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் இந்த பலவீனங்களை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய ஈரான் தவறியது பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவலை தடுப்பதில் ஈரானின் தோல்வியையோ அல்லது புதிய கண்காணிப்பு வழிகளைக் கண்டறிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளும் திறனையோ குறிக்கிறது.
மொசாட்டும் சிஐஏயும் :
அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்த மொசாட் நுண்ணிய தகவல்கள் மூலமாக இந்த காரியங்களை சாதித்துள்ளது. அமெரிக்காவின் CIA மற்றும் பென்டகனுடன் இணைந்து ஆபரேஷன் எபிக் ஃபியூரியின் ஒரு பகுதியாகச் செயல்பட்டது. அதாவது ராஜதந்திரம் தோல்வியுற்ற இடத்தில், இரகசியத் தாக்குதல் தொடங்குகிறது என்பதே இஸ்ரேலின் திட்டம் ஆகும்.
சனிக்கிழமை பெப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஈரானிய ராணுவத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல், ஈரானிய அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அயத்துல்லா அலி கொமேனியும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான (Islamic Republic News Agency (IRNA) மற்றும்
Tasnim News Agency இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பல தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இஸ்ரேலின் உறுமும் சிங்கம் நடவடிக்கையில் ஈரானின் உயர்மட்டத் தளபதிகள் பலர் கொல்லப்பட்டதை ஈரானிய அரச ஊடகமான IRNA உறுதி செய்துள்ளது. கொல்லப்பட்ட முக்கிய தலைவர்களில் ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி
அப்துல் ரஹீம் மௌசவி என்பவர் முக்கியமானவர்.
அத்துடன் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தரைப்படைத் தளபதி முகமது பக்பூர் (Islamic Revolutionary Guard Corps IRGC ) அதியுயர் தலைவரின் பாதுகாப்பு ஆலோசகரான அலி ஷாம்கானி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *