முச்சந்தி

அரசாங்கம் அமைதியான கடல்; எதிர்க்கட்சி கொந்தளிப்பான கடல்; அமைச்சர் லால்காந்த கூறுகின்றார்

ஊழலையும் மோசடியையும் அரசியல் கலாசாரமாகக் கொண்ட தற்போதைய எதிர்க்கட்சியினருக்கு அதற்கு அப்பாற்பட்டு எதனையும் சிந்திக்க முடியாதுள்ளது .நிலக்கரி கேள்விமனுக் குரலில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என்று எவ்வளவு கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ளாது அவர்கள் வீணாகக் கூச்சலிடுகின்றனர் என விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவில் வீண் வார்த்தைகளைப் பேசுபவர்களோ அல்லது வாய்ச் சவடால் விடுபவர்களோ இல்லை என்ற போதிலும், அரசாங்கத்தின் மீது நாள்தோறும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூச்சலிடும் ஒரு குழுவினர் எதிர்க்கட்சியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி பன்முக போக்குவரத்து முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட போதே ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய அரசாங்கம் அமைதியான கடலைப் போன்றது எனவும், மிகவும் நிதானமாகவும் ஆழமாகவும் சிந்தித்து செயற்படுவதால் வீண் சத்தங்களுக்குப் பதற்றமடையாது அனைத்தையும் பொறுமையுடன் அவதானித்து வருகின்றது. . எதிர்க்கட்சியினர் கொந்தளிப்பான கடலைப் போன்று எப்போதும் சத்தமிட்டுக் கொண்டு அலைகின்றனர் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு விடயங்களைப் பற்றிப் பேசி வருகின்றனர் . அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதைத் தவிர எதிர்க்கட்சிக்கு வேறு வேலை இல்லை.பொய்களைக் கூறி அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது இவர்களின் பண்பு.

தற்போதைய அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களைப் போன்று ஒருபோதும் மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியதில்லை.இனிமேலும் அவ்வாறு செய்யப்போவதில்லை.நிலக்கரி விவகாரம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை .ஊழல் மற்றும் மோசடியை அரசியலாகக் கொண்ட எதிர்க்கட்சிக்கே இது பெரிய பிரச்சினையாகத் தெரிகின்றது.இது குறித்து விசாரணை நடத்தக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சியினர் கூறுவது போன்று மின்சார சபையினால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளமை நிலக்கரி நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக அல்ல .அது ஒரு தனிப்பட்ட நடைமுறை விடயம் . காலத்துக்குக் காலம் இவ்வாறான யோசனைகள் வருவது வழமை என்றாலும் இதுவரை மின் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை .இவ்விரண்டு விடயங்களையும் ஒன்றாக இணைத்து குழப்ப வேண்டாம் . அரசாங்கம் ஒவ்வொன்றையும் வெளிப்படைத்தன்மையுடனேயே செய்து வருவதால், எதிர்க்கட்சியினரால் இதுவரை சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *