கச்சதீவு இலங்கைக்கானது என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டம்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சத்தீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
புனித கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் நேற்று சனிக்கிழமை கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவின் ஒரு அடையாளமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் காணப்படுகிறது. இலங்கை மற்றும் இந்திய மக்களின் புனித தலமாகவும் கச்சத்தீவு காணப்படுகிறது.
இந்தியாவில் ஏதேனும் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் அங்கு கச்சத்தீவு ஒரு பிரதான பேசுபொருளாக காணப்படும். இந்திய அரசியல்வாதிகளில் ஒருசிலர் தமது வாக்கு வங்கிக்காக கச்சத்தீவு பற்றி பேசுவார்கள். அதனூடாகவேனும் தமது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.
சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்த தீவை கைப்பற்ற போவதாக இந்திய அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தானது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. கச்சத்தீவின் அடையாளத்தை இரு நாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.
![]()