முச்சந்தி

மஹிந்தானந்தவிற்கு பாய்ந்த சட்டம் நிலக்கரி மோசடிக்கு பொருந்தாதா?

இறக்குமதி நடவடிக்கையின் போது அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள கோடிக் கணக்கான ரூபா நஷ்டத்திற்கு மட்டும் சட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வினவினார்.

இவ்வளவு பெரிய மோசடியை வெறும் அபராதத் தொகையுடன் மட்டும் முடிவுக்கு கொண்டு வருவது கேள்விக்குரியாகும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பில்லியன் கணக்கான பெரும் நஷ்டத்தை வெறும் அபராதத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தினால் அது பாரதூரமான பிரச்சினையாகும் என்பதையும் வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தொடர்பான வழக்கும் இதற்கு நிகரானதாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்த நிலக்கரி மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் எதிராக உடனடியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி (திசைக்காட்டி) அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற இந்த நிலக்கரி மோசடியின் ஊடாக பாரியளவில் முறையற்ற இலாபம் ஈட்டப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் யாருடைய பைக்குச் சென்றது என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் ஏற்பட்டுள்ள பில்லியன் கணக்கான பொதுப்பண நஷ்டத்தை அபராதத் தொகையூடாக ஈடுசெய்ய முடியாது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, இந்த நிறுவனம் விநியோகித்த 8 நிலக்கரி கப்பல்களால் ஏற்பட்டுள்ள நஷ்டம் மாத்திரம் 762 கோடி ரூபா (7.6 பில்லியன்) எனவும், இந்த ஒப்பந்தத்தை (Tender) தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டுக்கு இன்னும் மோசமான நஷ்டம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மோசடி மின்சார நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கும் விதம் குறித்து விளக்கிய முன்னாள் அமைச்சர், 15 பில்லியன் ரூபா நஷ்டத்தை ஈடுசெய்வதாகக் கூறி ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 13.5 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு பின்னணியில் இந்த நிலக்கரி மோசடியே இருப்பதாகவும் வெளிப்படுத்தினார்.

அங்கு ஒரு கிலோ நிலக்கரியின் உண்மையான விலை 30 ரூபாவாக இருந்தபோதிலும், மின்சார சபை அதனை 39.43 ரூபா எனக் குறிப்பிட்டுள்ளதுடன், அதில் உள்ள மேலதிக 9 ரூபாவானது நிலக்கரி மோசடியால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் ஒரு பகுதியை மக்களிடமிருந்து அறவிடும் முயற்சியாகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அத்துடன், இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிறுவனம் இந்தியாவில் பணமோசடி தொடர்பாக தண்டனை பெற்ற அவப்பெயர் கொண்ட ஒரு நிறுவனம் என்பதை அம்பலப்படுத்திய அவர்,தரமற்ற நிலக்கரியினால் வெளியேறும் அதிகளவிலான சாம்பல் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல்

பாதிப்பு குறித்து மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை உடனடியாகத் தனி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *