கட்டுரைகள்

அரசியல் பத்தித்தொடர்… சொல்- 48… சொல்லித்தான் ஆகவேண்டும்… தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ
அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – பகுதி VII. (நிறைவு)

“கிழக்கைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆர்வலர்களும்-துறை சார் நிபுணர்களும்-விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட தொழிலாளர் சமூகமும்-எழுத்தாளர் கலைஞர் ஊடகவியலாளர்களும்-ஆன்மீகவாதிகளும் என எல்லாத் தரப்பினரும் இணைந்து கிழக்குத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான அரசியல் கட்டமைப்பை-பொறிமுறையை-பாதையை கட்டமைக்க தாமதியாது செயலில் இறங்க வேண்டும்”

என்ற பதிவொன்றை இப் பத்தித் தொடரில் இட்டபோது, அவ்வாறான தேவைக்குரிய அடிப்படைக் காரணிகளைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் சில நபர்கள் வழமைபோல இதற்குப் ‘பிரதேச வாத’ முலாம் பூசப்புறப்பட்டனர்.

ஆதலால் இத்தேவை பிரதேச வாதம் அல்ல; யாழ் மேலாதிக்கவாத அரசியல் அனுபவங்களால் ஏற்பட்ட அரசியல் யதார்த்தம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகக் கடந்த ஆறு பத்திகளிலும் வரலாற்றின் சில பக்கங்கள் புரட்டப்பட்டன இப்படி இன்னும் ஏராளமான பக்கங்களைப் புரட்டலாம்.

1977 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் செ.இராசதுரை அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலும், கவிஞர் காசி ஆனந்தனைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலும் வேட்பாளர்களாக நிறுத்தித் தேர்தல் களத்தில் ஒரே அணியைச் சேர்ந்த இருவரையும் அவர்கள்தம் ஆதரவாளர்களையும் மோதவிட்டமை.

1989 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டத்தில் தமிழர்கூட்டமைப்பை விரும்பாதவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையலாம் –  ஆனந்தசங்கரி அழைப்பு - ஐபிசி தமிழ் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஏற்கெனவே எட்டப்பெற்றிருந்த உடன்பாடுகளுக்கு முரணாகத் தன்னிச்சையாகத் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பட்டியலில் வேட்பாளராகப் போட்டியிட்டமை.
1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை வாக்குறுதியளித்தபடி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திரு சி. சம்பந்தமூர்த்திக்கு வழங்காமல் விட்டமை.

1994 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்திலே முன்பு வவுனியா நகரசபைத் தலைவராகப் பதவி வகித்தவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவருமான கேதீஸ்வரனுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பட்டியலில் இடம் கொடாமல் அமரர் மு. சிவசிதம்பரம் மற்றும் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் போட்டியிட்டமை
2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது மாகாணசபைத் தேர்தலின்போது பிள்ளையான் முதலமைச்சராவதைத் தடுக்கும் பொருட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீமைக் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டமை.

இம் மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட்ட பஷீர் சேகு தாவூதுக்குத் தமிழர்களை வாக்களிக்கக் கோரும் துண்டுப்பிரசுரங்களை மாவை சேனாதிராசா ஒரு மலையக அன்பர் மூலம் மட்டக்களப்பிலுள்ள மண்டூர் மகேந்திரன் என்பவருக்கு அனுப்பி வைத்திருந்தமை. (மண்டூர் மகேந்திரன் அவற்றை விநியோகிக்காமல் வைத்துவிட்டார்.)

பின்னர் 2012 இல் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் 11 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) பெற்றிருந்தும்கூட திரை மறைவில் அரசியல் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக்கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குத் தாரைவார்த்தமை.
2015இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுவதற்குப் பிள்ளையான் ஆதரவு அளிக்க முன்வந்தபோதும் அதனையும் தட்டிக் கழித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே வாய்ப்பை மீண்டும் கொடுத்தமை. (யாழ் மேலாதிக்கக் கட்சி அரசியல் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிள்ளையான் மீதிருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்குக் காரணம்)

2019 இல் நடந்ததேறிய ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்றால் கிழக்கிலே முஸ்லிம் அரசியல்வாதிகளின் கை ஓங்கும்; அவர்களது தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் எனும் களநிலையை நன்கு தெரிந்திருந்தும்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்தமை.
இப்படி வரலாற்றுப் பக்கங்கள் பலவற்றைப் புரட்டி இன்னும் விபரமாக வெளிப்படுத்தலாம். ஆனாலும் விரிவஞ்சி அவற்றை விவரிப்பதைத் தவிர்த்து கொண்டு இவ்விடயத்தின் நிறைவுக் குறிப்புகளுக்கு வரவிழைகிறேன்.

முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகன் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் - -  ImportMirror - No 1 leading Tamil News website in Sri Lanka

மேற்கூறப்பெற்ற அரசியல் வரலாற்று நிகழ்வுகளை மனங்கொள்ளும்போது, எப்போதுமே யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி பூர்சுவா அரசியல் கிழக்கு மாகாணத் தமிழர்களின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் தடையாக இருந்துள்ளமை ‘உள்ளங்கை நெல்லிக்கனியாக’த் தெரிகிறது. இவை கிழக்குத் தமிழர்களின் நலன்களின்மீது கிஞ்சித்தும் அக்கறையில்லாத அதன் யாழ் மேலாதிக்க குட்டி முதலாளித்துவக் குணாம்சத்தையே வெளிப்படுத்துகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களிடையே எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டுமென்றுதான் கிழக்கின் அத்தனை முஸ்லிம் அரசியல்வாதிகளும் விரும்புகின்றனர். காரணம் அப்போதுதான் தமிழர்களுக்குப் பாரபட்சமான தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தடங்கலின்றி மேற்கொள்ளலாம் என்ற வஞ்சக எண்ணமே. கிழக்குத் தமிழர்கள் அவாவி நிற்கும் தனித்துவ அரசியல் மேற்கிளம்பக்கூடாதென்பதே அவர்களது இலக்கு.

மட்டுமல்லாமல், கிழக்கின் தனித்துவ அரசியல் சிந்தனை மழுங்கடிக்கப்பட வேண்டும் என்று யாழ் மேலாதிக்க சிந்தனை கொண்ட புலம்பெயர் தமிழ் சமூகப் பிரதிநிதிகளும் விரும்புகின்றனர். அவர்களும் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தொடர்ந்து அரசியல் அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வகிபாகம் யாதெனில் இரு பகுதியினரதும் அதாவது கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் புலம்பெயர் யாழ் மேலாதிக்க சமூகப் பிரதிநிதிகளினதும் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுத்து தங்களுக்கு வேண்டிய ஆதாயங்களைப் பெற்றுக் கொள்வதாகும்.

*கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் என்பது தமிழ்த் தேசியக் கருத்தியலிற்கோ அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒற்றை மொழிவாரி மாகாணக் கோரிக்கைக்கோ எதிரானதல்ல.

*தமிழரசுக் கட்சியும் அதன் மறு பிறப்புக்களான தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவை தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று குறிசுடப்பட்ட ஏனைய கட்சிகளும் தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தினால் மட்டும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசினாலும் கடந்த எழுபத்தைந்து வருட காலமாகவே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்குரிய பொருளாதார வளத்தையும் அரசியல் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தித் தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரே வசனத்தில் சொல்வதானால் கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல் சமூகமும் வடக்கு மாகாணம் தமிழ் மக்களுக்கு; கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கு என்ற உளவியலின்-கருதுகோளின் அடிப்படையில்தான் தமது இஸ்லாமிய விஸ்தரிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கடந்த எழுபத்தைந்து வருட காலமாகக் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வாழ்விடங்கள்-வணக்கஸ்த்தலங்கள்-வயல் காணிகள் பல பறிபோயுள்ளன. ஆனால் இவற்றையிட்டு வடக்கைத் தளமாகக் கொண்ட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் பாராமுகமாகவே இருந்து வருகின்றன.

*அதனால் ‘அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும்’ என்பதற்கிணங்க கிழக்கு மாகாணத் தமிழர்கள் தாம் எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளை யதார்த்த பூர்வமாகக் கையாளுவதற்கு அவர்களுக்கான தனித்துவ அரசியல் அவசியமானது.
*அறிவுபூர்வமாகவும்-யதார்த்த பூர்வமாகவும்-மூலோபாயரீதியாகவும் நோக்கும் போது, இந்நாட்டில் அரசியல் அற்புதம் எதுவும் நிகழ்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒற்றை மொழிவாரி மாகாண ‘சமஸ்டி’ அமைந்தாலும் சரி-அல்லது தற்போதுள்ள 13 வது அரசியலமைப்புத் திருத்தம் முறையாகவும் முழுமையாகவும் அமுல் செய்யப்பட்டாலும் சரி-அல்லது தற்போதுள்ள நிலைமை இன்னும் நீண்டகாலம் நீடித்தாலும் சரி எப்போதுமே எக்காலத்திலும் வடக்கு மாகாணத்துக்குரிய குறிப்பாக யாழ் குடாநாட்டுக்குரிய அரசியல் வாய்ப்பாடு கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குப் பொருந்தவேமாட்டாது.
*கிழக்கு மாகாணத் தமிழர்கள் மூன்று விதமான அரசியல் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

ஒன்று: ஒட்டுமொத்த ஈழத் தமிழினமும் எதிர்கொள்ளும் பௌத்த சிங்களப் பேரினவாத அடக்குமுறையும் பாரபட்சங்களும்.

இரண்டாவது: முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளாலும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இஸ்லாமிய விஸ்தரிப்பு வாதம்.
மூன்றாவது: தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் யாழ் மேலாதிக்க அரசியல்.
இவற்றில் முதலிரண்டு சவால்களும் புறப்பகைகளாகும். மூன்றாவது வெளித்தெரியாதபடி உள்ளிருந்து கருவறுக்கும் அகப்பகையாகும்.

முதலில் அகப்பகையிலிருந்து விடுபட்டால் மட்டுமே புறப்பகைகளைக் கையாளவும் எதிர்கொள்ளவும் முடியும்.

இலங்கையில் முஸ்லிம் அரசியல் எழுச்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  19வது தேசிய மாநாடும்....! - ImportMirror - No 1 leading Tamil News website  in Sri Lanka

இந்த அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் தேவையைப் பிரதேசவாதம் எனப் பெயர் சூட்டுவார்களாயின் அதுவும்கூட யாழ் மேலாதிக்க அரசியலின் பிரதிபலிப்பே.

இப்படி நியாயத்தை மறுத்து எதிர்காலத்திலும் வடக்கைத் தளமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் தமது கட்சி நலன்களுக்காகக் கிழக்கில் ‘கடை’ விரிக்க முயன்றால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அக்கட்சிகள் அனைத்தையும் தயவுதாட்சண்யமின்றி முற்று முழுதாக நிராகரிக்க முன் வருதல் வேண்டும். இதுவொன்றே யாழ் மேலாதிக்க அரசியலிலிருந்து கிழக்குத் தமிழர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான ஒரே மார்க்கமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *