கட்டுரைகள்

தமிழன் அன்று சீனாவில் வணிகம்!…  தமிழன் இன்று சீனாவில் பயணம்!!….  தொடர்- 14….. சங்கர சுப்பிரமணியன்

சைக்கிள் ரிக்‌ஷாக்காரர் இருக்கையை இரண்டு தட்டு தட்டி உட்காரும்படி சைகை காட்டினார். எங்களுக்கு சைக்கிள் ரிக்‌ஷாவில் போகலாமா வேண்டாமா என்ற சந்தேகம் வந்தது. யாரும் போவதுபோலவும் தெரியவில்லை. யாரும் போகாவிட்டால் சைக்கிள் ரிக்‌ஷாவை வைத்திருப்பாரா? என் மனைவியால் நடக்கமுடியவில்லை. சரி போகலாம் என்று முடிவு செய்தோம். எவ்வளவு என்று சைகையல் கேட்டோம்.

சட்டென்று சட்டைப் பையில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டு அளவில் இருந்த அட்டையை காண்பித்தார். அதில் 400 யூஅன் என்று எழுதியிருந்தது. ஆசிய ரத்தம் எல்லா இடத்திலும் ஒரேமாதிரிதான் உள்ளதைப் புரிந்து கொண்டேன். அந்த இடத்தில் வாடகை வாகனம் மட்டும் அனுமதிக்கப் பட்டிருந்தால் அதிகபட்சம் 80யூஅன் மட்டுமே கொடுக்க வேண்டியதிருக்கும்.

சூழ்நிலையைப் புரிந்து கொண்டு கேட்பவர்கள் எல்லா இடத்திலும் இருக்கவே செய்கிறார்கள் என்பதுதான். அது மனித இயல்பு. யாரையும் குறை சொல்லமுடியாது. நாங்கள் சற்று தயங்கவே தடாலென்று என்ற எங்கள் இருவரையும் சுட்டுக்காட்டி இரண்டு விரலை இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்பதுபோல் கேட்டார்.

நான் புரிந்து கொண்டு அவர்பாணியிலேயே எங்கள் இருவரையும் சுட்டிக்காட்டி 200 யூஅனைக் காட்டினேன். அவர் முகத்தில் மகிழ்ச்சியின் சாயலைக் கண்டதும் சரி என்று தலையாட்டியபடி இருக்கையில் அமர்ந்தோம். சைக்கிள் ரிக்‌ஷா ஓட ஆரம்பித்தது. எங்களை எல்லோரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். என்மனதிலோ அன்னாந்து பார்க்கிற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக் குடிசைகட்டி பொன்னான நகர் என்று பெயரும் வைத்தால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் என்ற பாடல் ஓடியது.

பார்க்கும் இடங்கள் எல்லாம் வானுயரக் கட்டிடங்கள் என்ற பிரம்மாண்டத்தைப் பார்த்தாலும் ஒரு சைக்கிள் ரிக்‌ஷாகாரரைப் பார்த்ததும் என் மனதில் வேறுவிதமாக எண்ணம் தோன்றியது. கடைநிலை மக்கள் இருக்கிறார்களோ என்பதே அந்த எண்ணம்.
அப்புறம் தான் சுற்றுலாத்தளங்களில் சில இடங்களில் இன்னும் சைக்கிள் ரிக்‌ஷா இருக்கின்றன என்பதை அறிந்தேன். இருப்பினும் நகரத்தின் மையப்பகுதிகளில் பாதுகாப்பு கருதி அனுமதிப்பதில்லை.

அது உண்மை என்பதை அந்ந ரிக்‌ஷாகாரர் போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தை அடைந்ததும் நிறுத்தியதிலிருந்து அறிந்தேன். இருநூறு மீட்டர் தூரத்துக்கு முன்பே நிறுத்தி விட்டார். அவ்வளவை தூரம் அழைத்து வந்ததே பெரிய உதவியாக இருந்தது. எதிர் திசையில் ஒரு போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும்தான் நிறுத்தினார்.

வாகனத்தில் இருந்ந போலீஸ்காரர்களும் எங்களை முறைத்துப் பார்த்தபடியே சென்றனர். அவர்கள் சாதாரணமாகக்கூட பார்த்தபடி சென்றிருக்கலாம். அல்லது வேறுநாட்டைச் சார்ந்தவர்களை நம் நாட்டுக்காரர் சைக்கிள் ரிக்ஜாவில் ஏற்றிச் செல்கிறாரே என்றுகூட நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ இறங்கியதும் அவர் சம்மதித்ததற்கும் அதிகமாக இன்னொரு நூறு யுஆனையும் சேர்த்து 300 யுஆனைக் கொடுத்தேன்.

அப்போது நான் எதிர் பாராத ஒன்று நடந்தது. ராமன் ஆஞ்சநேயரைக் கட்டித் தழுவுவதுபோல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார். எனக்கு ஆஞ்சனேயருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி ஏற்படவில்லை ஆனால் கூலியைக் குறைத்து கொடுக்கவில்லை என்ற நிம்மதி ஏற்பட்டது. ஏனென்றால் நம்ம சித்திரகுப்தர் இதையெல்லாம் பார்த்தபடி என்னுடைய கணக்கில் அப்லோட் செய்து கொண்டிருப்பார் அல்லவா?

நான் சீனாவில் இருந்த நாள்வரை சுற்றுலாத் தளங்களிலோ மற்றபடு எந்த பொது இடங்களிலோ ஒரு பிச்சைக்காரரையும் கண்டதில்லை. ஆனால் மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள் என அறிந்தேன். அரசாங்கமும் அவர்களை பொது இடங்களில் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்றும் அறிந்தேன்.

அடுத்தபடி சொல்லவேண்டுமனால் பார்க்கும் இடமெல்லாம் பரவியிருக்கும் பரம்பொருளை அவர்கள் பார்க்கும் இடங்களில் எல்லாம் வைக்கவில்லை. சாலைகளிலும் சந்திகளிலும்
நடைபாதைகளிலும் பரம்பொருளுக்கு பட்டாபோட்டு இடம் கொடுக்கவில்லை. மற்றபடி அங்கும் வழிபடுமிடங்கள் நிறையவே உள்ளன. ஆனால் கண்களில் தென்படவில்லை.

சொர்க்க கோவில் என்றழைக்கப்படும் டெம்பிள் ஆப் ஹெவன் போன்ற கோவிலில் பேரரசர்களால் நல்ல அறுவடைக்காக வேண்டி மதச்சடங்குகளை நடத்திய இடங்கள் கூட குறிப்பிட்ட நேரத்தைத் தவர பெரும்பாலும் மூடியே கிடக்கின்றன. ரிக்‌ஷாக்காரர் இறக்கிவிட்ட இடத்தில் இருந்து டியானன்மன் ஸ்கொயர் செல்ல கொஞ்சதூரம் தடக்க வேண்டியிருந்தது.

போக்குவரத்து நெரிசலின் காரணமாகவே மேலும் முன்னே செல்லமுடியாதல் இறக்கிவிட்டார் என்பதை அறிந்தேன். அவரின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. டியானனமன் ஸ்கொயரை நோக்கி நடந்தோம். பீஜிங் நகரத்தின் மையப்பகுதியில் ஏறத்தாழ 44 ஹெக்டேர் பரந்த நிலப்பரப்பில் டியானன்மன் ஸ்கொயர் அமைந்துள்ளது.

முதலில் இந்த டியானன்மன் ஸகொயரின் முகன்மையைப் பற்றி சிறிது சொல்கிறேன்.
சீனாவில் ஜூன் நான்கு கிளர்ச்சி என்று பரவலாக அறியப்படும் மாணவர்களின் போராட்டம் டியானன்மன் என்ற இடத்தில் இவ்விடத்தில் நடைபெற்றது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினைந்தாம் நாள் தொடங்கிய போராட்டம் ஜூன் நான்காம் நாள் வரை தொடர்ந்தது.

வாரக்கணக்கில் நடந்த நடந்த இப்போராட்டத்தில் சீன அரசுக்கும் போராட்டம் நடத்தும்

மாணவர்களுக்கும் இடையே நடந்த பேச்சு வாரத்தைகளில் அமைதியான தீர்வை எட்ட முடியவில்லை. ஆதலால் சீன அரசு இராணுவத்தை அனுப்பி ஜூன் மாதம் மூன்றாம் நாள் இரவு போராட்டத்தில் ஈடுபட்டிருத்த மாணவர்களை அகற்ற முயன்றது.

இந்த நிகழ்ச்சியே டியானன்மன் ஸ்கொயர் படுகொலை என்று அறியப்படுகிறது. இது என்பத்தொன்பது மக்கள் எழுச்சி, டியானன்மன் ஸகொயர் சம்பவம் மற்றும் டியானன்மன் கிளர்ச்சி என்றெல்லாம் அறியப்படுகிறது. இப்போராட்டத்தை அகற்றும் முயற்சில் அருகிலிருந்த பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருத்தோர் மற்றும் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இறப்பில் பல நூறுகளில் இருந்து பல ஆயிரங்கள் வரையில் கொல்லப் பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல உயிர்கள் மடிந்த அந்த இடத்தை அடைந்ததும் மனதில் ஏதோ ஒரு பாரம் அழுத்துவதை உணர முடிந்தது.

மறைந்தவர்களுக்காக மனதில் அஞ்சலி செலுத்திவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றோம். மாலை மயங்கி இரவை நெருங்க நாங்களும் அன்றைய பயணத்தை முடித்து அறைக்கு செல்ல எண்ணி வாடகை வாகனத்தை தேடினோம். வீசாட் செயலியை பாவித்து வாடகை வாகனத்தை வரவழைக்க முயன்றேன். முயற்சி திருவினை ஆக்கவில்லை. சீனமொழியில் பதில்தான் வந்து கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *