முச்சந்தி

கொமேனி மகனின் இரகசிய சொத்து குவிப்பு; ஈரானிய எண்ணெய் வளம் சூறையாடப்படுகிறதா ?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானில் பொருளாதர நெருக்கடி உச்சத்தில் இருக்கும் வேளையில், கொமேனி மகனின் இரகசிய சொத்து குவிப்பு பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஈரானிய எண்ணெய் வளம் தலைமையாலும், உயர் அதிகார சக்தியாலும் சூறையாடப்படுகிறதா என்ற சந்தேகம் ஈரானிய பொது மக்களிடையே எழுந்துள்ளது. இதுவே அண்மைக் காலமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்தது என்றும் கூறப்படுகிறது)

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனியின் 56 வயதான மகன் மோஜ்தபா கொமேனி வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களைக் இரகசியமாக குவித்துள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் சொகுசு வீடுகள்:

ஐரோப்பாவின் பல நாடுகளில் உயர்தர ஹோட்டல்கள் மற்றும் வணிக கட்டிடங்களிலும் மோஜ்தபா கொமேனி (Mojtaba Khamenei) லண்டனில் பல கோடி மதிப்புள்ள வீடுகளை முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சொத்துக்கள் சாதாரண மனிதரால் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்தவை என குறிப்பிடுகின்றன. இலண்டனின் மிகவும் விலையுயர்ந்த பகுதியான Bishops Avenueவில் சொகுசு பங்களாக்கள் முதல் ஜெர்மனியின் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரை மோஜ்தபாவின் ரகசிய சொத்துக்கள் பல இடங்களில் பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சொத்துக்கள் அனைத்தும் மோஜ்தபா கொமேனியின் பெயரில் நேரடியாக இல்லை. அதற்க்கு பதிலாக, “ஷெல் கம்பெனி” எனப்படும் போலி நிறுவனங்கள் மற்றும் நம்பகமான வணிகர்களின் பெயர்களில் இந்த சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உண்மையான உரிமையாளர் யார் என்பதை கண்டறிவது மிகவும் கடினமாகிறது.

எனவே இந்த அளவிலான செல்வம் எங்கிருந்து வந்தது என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. ஈரானின் எண்ணெய் வருமானம் மற்றும் அரசு தொடர்புடைய வர்த்தகங்களில் இருந்து பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அந்த பணம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு வங்கிகள் வழியாக முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஈரானில் மக்கள் போராட்டம்:

தற்போது ஈரானில் மக்கள் வேலை இல்லாமை, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு போராடி வீதிகளில் இறங்கி போராடி வந்தனர். ஆனால் இந்த போராட்டங்களை அரசு கடுமையாக எதிர்த்து அடக்கியது. ஆனால் ஈரான் நாட்டின் முக்கிய அதிகாரிகளின் குடும்பங்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்வது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவே அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மேலும் தீவிரம் சேர்த்துள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ஈரான் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வந்தனர். அத்துடன் அந்நாட்டின் நாணய மதிப்பு சரிந்து வரும் வேளையிலும், சர்வதேசத் தடைகளால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்வது ஈரான் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் வழியாகப் பரவி வரும் இந்தச் செய்திகள், ஆட்சிக்கு எதிரான மனநிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளன. மத ரீதியான கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர், இவ்வளவு ஆடம்பரமான மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் சொத்துக்களைக் குவிப்பது பெரும் முரணாகப் பார்க்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மோஜ்தபா கொமேனி அல்லது ஈரான் அரசு தரப்பில் இருந்து இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் சில ஈரானிய வணிகர்கள், தங்களுக்கு அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளனர்.

பினாமி சொத்துக்கள்:

அமெரிக்காவின் வர்த்தக தடைகள் அமலில் இருந்தபோதிலும், ஷெல் நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் மூலம் இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அலி அன்சாரி என்ற ஈரானிய வங்கியாளர் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2014-ஆம் ஆண்டில் மட்டும் ஒரே ஒரு கட்டிடத்திற்காக பல மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் ஸ்பெயினின் மல்லோர்கா பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளும் இவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் வங்கிகள் வழியாக வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டு இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரானில் கடுமையான பொருளாதார தடை:

அயதுல்லா அலி கொமேனியின் மகன் மஜ்தபா கொமேனி, உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமான முறையில் சொத்துக்களைக் குவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. ஈரானில் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் மக்கள் வறுமையில் வாடி வரும் சூழலில், அந்நாட்டின் உச்சபட்ச அதிகார மையத்தில் இருக்கும் ஒருவரின் வாரிசு, பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை லண்டன் முதல் துபாய் வரை பரப்பி வைத்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒரு மதத் தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவ்வளவு பெரிய பொருளாதாரச் சாம்ராஜ்யத்தை எப்படி உருவாக்கினார் என்பது குறித்த விரிவான புலனாய்வுத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மஜ்தபா கொமேனியின் இந்த சொத்து சாம்ராஜ்யம் என்பது ஏதோ ஒரு சில கட்டிடங்களுடன் நின்றுவிடவில்லை. ஐரோப்பாவின் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், மத்திய கிழக்கில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பல நாடுகளில் உள்ள ரகசிய முதலீடுகள் என இது மிக நீளமானது.

குறிப்பாக லண்டனின் மிக விலையுயர்ந்த பகுதிகளில் இவரது பினாமிகள் மூலம் பல கோடி மதிப்பிலான வீடுகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை வாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதுதான் தற்போது உலக நாடுகளின் உளவு அமைப்புகளின் முக்கிய கவனிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஈரானின் அரசு நிதியிலிருந்தோ அல்லது அந்நாட்டின் எண்ணெய் வணிகத்திலிருந்தோ இந்தப் பணம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

போலி நிறுவன முதலீடு:

பாரிய சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்காக மஜ்தபா கொமேனி மிகவும் சிக்கலான நிதி கட்டமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளார். நேரடியாகத் தனது பெயரில் எந்தச் சொத்தையும் வாங்காமல், பல்வேறு போலி நிறுவனங்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய நபர்களின் பெயர்களில் இந்த முதலீடுகளைச் செய்துள்ளார்.

வரி ஏய்ப்பு சொர்க்கங்கள் என்று அழைக்கப்படும் நாடுகளில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் இந்தப் பணப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூட இந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தை அறியாத வகையில் மிகவும் நுட்பமாகச் செயலாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஒரு தனிநபரின் முதலீடு என்பதைத் தாண்டி, ஒரு அரசாங்கத்தின் நிழல் பொருளாதாரத்தைப் போலச் செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.

சட்டவிரோத பண பரிமாற்றம்:

இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளால் சர்வதேச அரங்கில் இந்த விவகாரம் ஈரானுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிராந்திய அரசியல் நிலைப்பாடுகளால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது கடுமையான பார்வையைச் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஈரானின் எதிர்காலத் தலைவராகக் கருதப்படும் மஜ்தபா கொமேனி மீதான இந்த ஊழல் புகார்கள், ஈரானியத் தலைமைக்கு உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயினும் இந்தப் புகார்கள் குறித்து ஈரான் அரசாங்கம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்நிலையில் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இந்த நிதித் தடயங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்தச் சொத்து சாம்ராஜ்யம் அம்பலமாகியுள்ள விதம், நவீன காலப் போலி நிறுவனங்கள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் எந்த அளவிற்கு வலிமையாக உள்ளன என்பதைக் காட்டுகிறது. ஒரு நாட்டின் வளங்கள் எப்படித் தனிநபர்களின் லாபத்திற்காகத் திசைதிருப்பப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. இனி வரும் காலங்களில் சர்வதேசப் பொருளாதார அமைப்புகள் இதுபோன்ற மறைமுக முதலீடுகள் மீது கடுமையான விதிகளைக் கொண்டு வர இந்தச் சம்பவம் ஒரு தூண்டுகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஜ்தபா கொமேனியின் இந்த உலகளாவிய சொத்து குவிப்பு குறித்த தகவல்கள், ஈரான் நாட்டின் உள்நாட்டு அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகப் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *