முச்சந்தி

சீனாவில் உய்குர் மக்கள் மீதான அடக்குமுறை: கலாச்சார ஆதிக்கமும் இன முரண்பாடும்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உய்குர் இன மக்கள் நெடுங்காலமாக, சீனாவிடமிருந்து விடுதலை கோருகின்றனர். ஆனால், சீனா இதைப் பல ஆண்டுகளாக மறுத்துவருகிறது. திபெத்தைப் போல சிஞ்சியாங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம். ஆனால், நடைமுறையில் அது நிகழ்வதில்லை. சீன அரசுதான் சிஞ்சியானை கட்டுப்படுத்தி வருகிறது)

உய்குர் (Uyghur) இன மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை செய்வதாக தொடர்ந்தும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. சர்வதேச சட்டங்களின்படி, இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கம் ஆகும். அதன்படி முகாம்களில் உய்குர்களைத் தடுத்து நிறுத்துவதோடு, உய்குர் குழந்தைகளை அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிப்பது, மக்கள்தொகையை அடக்குவதற்கு உய்குர் பெண்களை சீனா பலவந்தமாக கருத்தடை செய்ய வைப்பதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சீனாவில் சிஞ்சியாங் வடமேற்கு பிராந்தியத்தில் பெரும்பாலும் முஸ்லீம் உய்குர் சமூகத்தை சேர்த்த மக்கள் தொடர்பாக சீனா உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கண்டனங்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் மறு கல்வி முகாம்கள் என்று அரசு வரையறுக்கும் விஷயத்தில் சீனா ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களை தடுத்து வைத்திருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நம்புகின்றன. அந்த முகாம்களில் உய்குர்கள் கட்டாய உழைப்பிற்கு பயன்படுத்தப் படுவதாகவும், பெண்கள் வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்படுவதற்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிக சான்றுகள் உள்ளன.

உய்குர்களை அடக்குவதன் மூலம் சீனா மனிதகுலத்திற்கு எதிரான இனப்படுகொலை மற்றும் குற்றங்களைச் செய்ததாக அமெரிக்கா நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. உய்குர் இன மக்கள் நெடுங்காலமாக, சீனாவிடமிருந்து விடுதலை பெறக் கோருகின்றனர். ஆனால், சீனா இதைப் பல ஆண்டுகளாக மறுத்துவருகிறது.

சீனா மீது குற்றச்சாட்டு :

சிஞ்சியாங்கில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு மையங்களில் சீனர்கள் ஒரு மில்லியன் மக்களை வைத்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் இருப்பதாக 2018 ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
முகாம்களில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் நபர்கள் உடல், மன மற்றும் பாலியல் சித்திரவதைகளை எதிர்கொண்டதாகவும், பெண்கள் கூட்டு கற்பழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகவும் குற்றசாட்டுக்கள் பதிவாகியுள்ளன. டிசம்பர் 2020இல் நடந்த ஆய்வில் அரை மில்லியன் மக்கள் பருத்தி எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், மறு கல்வி முகாம்களின் அடிப்படையில் புதிய தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது.

யார் இந்த உய்குர்கள் ?

மண்ணின் மைந்தர்களான “உய்குர்” மக்கள், துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி பேசுவதுடன், இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். சின்ஜியாங் பிராந்தியத்தில் வடமேற்கு சீனாவில் சுமார் 12 மில்லியன் உய்குர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் பகுதி அதிகாரப்பூர்வமாக சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சி மண்டலம் (XUAR) என்று அழைக்கப்படுகிறது. உய்குர்கள் துருக்கியைப் போலவே தங்கள் சொந்த மொழியைப் பேசுகிறார்கள். மேலும் தங்களை கலாச்சார ரீதியாகவும் இன ரீதியாகவும் மத்திய ஆசிய நாடுகளுடன் மிக நெருக்கமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

கிட்டத்தட்ட ஈரான் அளவான மாநிலத்தில், பாலைவனத்தையும், அதில் திரியும் அடர்ந்த ரோமங்கள் கொண்ட ஒட்டகங்களையும் அங்கே காணலாம். எரிபொருள் தாகம் கொண்ட சீன பொருளாதாரத்திற்கு, சிங்ஜியாங்கில் கொட்டிக் கிடக்கும் எண்ணையும், எரிவாயுவும் வரப்பிரசாதங்கள். இதனால் சின்ஜியாங் “சீனாவின் குவைத்” என்று பொருளாதார அறிஞர்கள் பெயர் சூட்டியிருந்தனர்.

செல்வச் செழிப்புடன் திகழ வேண்டிய மாநிலத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வு இரு வேறுபட்ட இனங்களை எதிரிகளாக்கியுள்ளது. சீனர்களால் சுரண்டப்படுவதாக துருக்கி இனத்தவர்கள் குமுறுகின்றனர். தொழிற்துறை விருத்தி சீனர்களுக்கே சாதகமாக அமைவதாக மனம் வெதும்புகின்றனர். வசதிபடைத்த நகரமயமாக்கப்பட்ட இடங்கள் சீனரின் வாழ்விடமாகவும், ஏழ்மையும், குறைபாடுகளும் கொண்ட குடியிருப்புகளில் உய்குர் மக்களும் இரு வேறு உலகங்களில் வாழ்கின்றனர்.

இந்த உய்குர் இனத்தவர் சின்ஜியாங் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவாகவே உள்ளனர். கடந்த தசாப்தங்களில், சீனாவின் பெரும்பான்மை இனத்தவரான ஹான் சீனர்கள் சின்ஜியாங்கிற்கு பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக உய்குர்கள் தங்கள் கலாச்சாரமும், வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக உணர்கின்றனர். திட்டமிட்ட அல்லது பொருளாதார நலன்களுக்காக குடியேறும் சீன மக்கள், மாநிலத்தின் குடிசனப் பரம்பலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் தமது பாரம்பரிய மண்ணில், தாம் சிறுபான்மையினராகி வருவதாக உய்குர் இனத்தவர்கள் முறையிடுகின்றனர்.

ஒடுக்குமுறை உருவாக காரணம் ?

1990-களில் இருந்து சின்ஜியாங்கில் உய்குர் மக்களிடையே எதிர்ப்பு மற்றும் பிரிவினைவாத உணர்வு உயர்ந்தது. சில சமயங்களில் இப்பிராந்தியம் முழுமையாக வன்முறையில் மூழ்கியது. 2009 ஆம் ஆண்டில் சின்ஜியாங்கில் ஏற்பட்ட மோதல்களில் சுமார் 200 பேர் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு சீனர்கள் தங்கள் சொந்த மாநிலத்தை விரும்பும் உய்குர்கள் மீது குற்றம் சாட்டினர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, அப்பகுதியில் மக்கள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள். எத்தனை முறை தங்கள் வீட்டுக் கதவைப் பயன்படுத்துகிறார்கள் போன்ற மக்களின் நடத்தைகளைக் கண்காணிக்க ஒரு மொபைல் பயன்பாட்டையும் போலீசார் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சீனாவில் உள்ள அனைத்து மதங்களும் பொது நோக்குநிலையில் சீனர்களாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் உத்தரவு பிறப்பித்ததில் இருந்து, அங்கு மேலும் ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் உய்குர் கலாச்சாரத்தை ஒழிக்க சீனா முயற்சிப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுமார் ஒரு மில்லியன் உய்குர்கள், கசாக் மற்றும் பிற முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் அடையாளத்தை விடுவதற்கான கல்வி கற்பிக்கப்படுவதாகவும், அவர்கள் ஹான் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் கம்யூனிச நாட்டில் ஒடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்த மக்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிலிருந்து தப்பிக்க முடிந்த சிலரே இந்த முகாம்களில் நிலவும் உடல், மன ரீதியான சித்திரவதைகளையும் பாலியல் சித்திரவதைகளையும் பற்றி பேசுவதாகக் கூறப்படுகிறது.

இன அழிப்பில் சீனா?

சீனா, இந்த உய்குர் முஸ்லிம் இனத்தை அழிப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த மக்களை தீவிரமாகக் கண்காணிப்பது, சித்ரவதை செய்வது, காரணமின்றி முகாம்களில் அடைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சீனா உய்குர் முஸ்லிம் மக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

உய்குர் இன மக்கள் நெடுங்காலமாக, சீனாவிடமிருந்து விடுதலை கோருகின்றனர். ஆனால், சீனா இதைப் பல ஆண்டுகளாக மறுத்துவருகிறது.

திபெத்தைப்போல சிஞ்சியாங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம். ஆனால், நடைமுறையில் அது நிகழ்வதில்லை. சீன அரசுதான் சிஞ்சியானை கட்டுப்படுத்திவருகிறது. இது அதிகமாக பருத்தி விளையக்கூடிய ஓர் இடம். மேலும், எண்ணெய் வளம் மிகுந்த ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது. உய்குர் முஸ்லிம்கள் தங்களின் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக அறிவித்திருந்தனர்.

ஆனால் 1949-ம் ஆண்டு மாவோ தலைமையில் சீனாவில் ஏற்பட்ட புதிய கம்யூனிஸ்ட் அரசு, அதன் கட்டுப்பாட்டை முழுவதுமாக தனக்குள் கொண்டுவந்தது.

கம்யூனிச கோட்பாடுகளுடன் மத நம்பிக்கை ஒத்துப் போகாத காரணத்தால், மத நம்பிக்கைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சீன அரசின் உதவியோடு சீனாவின் பெரும்பான்மை இனமான ஹான் குழுவினர் 1950-களில் உய்குர் மக்கள் வாழும் பகுதிகளுக்குக் குடிபெயரத் தொடங்கினர். ஹான் மக்கள் அவர்களுக்கென கட்டமைப்புகளையும், வர்த்தகங்களையும் உருவாக்கினர். தற்போது அங்கு 40 சதவிகித அளவில் ஹான் மக்கள் இருக்கிறார்கள்.

சீனா ஏன் உய்குர்களை குறிவைக்கிறது?

சீனாவின் மிகப்பெரிய பகுதியான சிஞ்சியாங் நிர்வாக ரீதியாக சீனாவிற்குள் ஒரு தன்னாட்சி பகுதி. தாதுக்கள் நிறைந்துள்ள பகுதி. மேலும், அது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது.
உய்குர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மாண்டரின் மொழியை தங்கள் சொந்த மொழியாகப் பேசமாட்டார்கள். அவர்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வேறுபட்ட இனமும் கலாச்சாரமும் கொண்டவர்கள்.

கடந்த சில தசாப்தங்களாக, பொருளாதார செழிப்பு சிஞ்சியாங்கில் வந்துள்ளதால், அது அதிக எண்ணிக்கையிலான ஹான் சீனர்களை அங்கே கொண்டு வந்துள்ளது. அவர்கள் சிறந்த வேலைகளை குறிவைத்துள்ளனர். மேலும், உய்குர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களையும் அடையாளத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக உணர்ந்தனர்.
2014 இல், ஜனாதிபதி ஷி ஜின்பிங் சிஞ்சியாங்கிற்கு வருகை தந்தார்.

சீன அரசாங்கம் எப்படியோ உய்குர்க்களை வெற்றிகொண்டது. உலகின் பிற பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா விலகிய நிலையில், ஒரு உள்ளூர் போர்க்குணமானது ஒரு பயங்கரவாத-பிரிவினைவாத சக்தியாக வளரக்கூடிய ஒன்றாக கருதப்பட்டது. இது சீனாவிலிருந்து விலகி ஒரு சுயாதீனமான ‘கிழக்கு துர்கிஸ்தான்’ அமைப்பதில் உறுதியாக இருந்தது.

இங்கிருந்து வரும் சீனக் கொள்கை முழு சமூகத்தையும் சந்தேக நபர்களாகக் கருதுவதோடு, ஒரு தனித்துவமான உய்குர் அடையாளத்தை மெதுவாக நீக்குவதற்கு முறைப்படுத்தப்பட்ட திட்டத்தைத் தொடங்குகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *