கவிதைகள்
வாழ்வு வளமாய் ஆக வேணும்!… கவிதை…. ஜெயராமசர்மா

சமநிலை உலகம் பெற வேணும்
சண்டை களில்லா நிலை வேணும்
அழுதிடு மனைவரும் மகிழ் வுடனே
அமைதியாய் வாழும் நிலை வேணும்
பசிப் பிணியில்லா நிலை வேணும்
பட்டினி என்பது அற வேணும்
தனி ஒரு மனிதனும் பசியாலே
தவிக்கா நிலையே வர வேணும்

இருப்பார் கொடுக்கும் நிலை வேணும்
ஏற்கார் இல்லா நிலை வேணும்
தடுக்கும் மனங்கள் தரணி எங்கும்
தானாய் தாழ்ந்து விட வேணும்
இல்லம் இல்லார் இல்லை எனும்
இல்லா நிலையே எழ வேணும்
ஏழ்மை என்னும் கரு ஒழிந்து
வாழ்வு வளமாய் ஆக வேணும்
ஊழை நம்பும் நிலை அகன்று
உழைப்பை நம்பும் நிலை வேணும்
நாளை என்று எண்ணி நிற்பார்
இன்றே செய்யும் நிலை வேணும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆபிஸ்திரேலியா
![]()