வட, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தொடர்ந்து போராடும்

உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது.உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை.அவர்கள் உணர்வுடன் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராடியவர்கள்.எனவே வடக்கு கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் ஒற்றுமையுடன் எமது உறவுகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவாநந்தன் ஜெனிற்றா தெரிவித்தார்.
-மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க புதிய நிர்வாக தெரிவு நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது புதிய நிர்வாகத்தில் தலைவராக மீண்டும் உதயச்சந்திரா தெரிவு செய்யப்பட்டார்.செயலாளராக லுஸ்ரின் மோகன்ராஜ்,உப தலைவராக திருமதி ரஞ்சினி,உப செயலாளராக வேணி, பொருளாளராக இமாக்குலேற் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட தோடு, நிர்வாக உறுப்பினர்கள் 8 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009 ஆம் ஆண்டு எமது உறவுகளை கையில் ஒப்படைக்கப்பட்டும்,சரணடைந்தும்,இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் வைத்தும் கடத்திச் செல்லப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கோரி 16 வருடங்களை கடந்து தொடர்ந்தும் எம் உறவுகளுக்காக போராடி வருகின்றோம்.
எமது உறவுகள் எங்கே என்று கேட்டு தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.ஆனால் அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்று பதில் கூற முடியாத நிலையில் இந்த நாட்டை ஆட்சி செய்த. ஆட்சி செய்யும் அரசுகள் உள்ளன.
மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் பொய் பிர சாரங்களை கூறி எமது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றன . தற்போது போராட்டக்குழுவில் இருந்து வந்துள்ள அநுர அரசும் இன்று போலி நாடகம் ஆடி வருகிறது.அநுர அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி தெரியும் என்று கூறி இருந்தனர்.ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படாத நிலையில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்காமல் உள்ளார்.
எமது உறவுகளை அழித்ததே இந்த இராணுவம் தான்.ஒரு நாட்டில் இரண்டு இனம் வாழ்கின்ற போது ஓர் இனத்தை அழித்து ஓர் இனம் தெற்கிலே வெற்றி விழா கொண்டாடியுள்ளது.நாங்கள் இந்த நாட்டிலே மனிதர்களாக வாழ்வதற்கு உரிமை இல்லையா?நாமும் ஒரு தேசிய இனம். 30 வருடங்களாக எமது இளைஞர்,யுவதிகள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.எமது உரிமைகள் அப்போது மறுக்கப்பட்டிருந்தது.எமது உரிமைகளுக்காக அவர்கள் போராடினார்கள் என்றார்.
![]()